Published : 18 May 2022 06:12 AM
Last Updated : 18 May 2022 06:12 AM

ஆர்டிஐ தொடர்பாக மாநில தகவல் ஆணையர் அனுமதி வழங்கியும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் மின்வாரியம்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

உடுமலை: தகவல் பெறும் உரிமை தொடர்பாக மாநில தகவல் ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவிட்டும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் உடுமலை மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலுள்ள சில ஆவணங்களை பார்வையிடுவது தொடர்பாக உடுமலையை சேர்ந்த சமூக ஆர்வலர்என்.வள்ளிநாயகம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

2 ஆண்டுகள் சட்ட போராட்டத்துக்கு பின், இதற்கு அனுமதி அளித்து மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சமூக ஆர்வலருக்கு மின்வாரிய அலுவலகம் சார்பில் பொது தகவல் அலுவலர் சந்திரசேகரன் நேற்று அனுப்பிய கடிதத்தில், "வரும் 21-ம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 12 மணிக்குள்பொது தகவல் அலுவலரை அணுகவேண்டும். ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கைபேசியில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் சமூக ஆர்வலர்என். வள்ளிநாயகம் கூறும்போது, "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில்இல்லாத புதிய விதிகளை புகுத்தவோ அல்லது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவோ பொது தகவல் அலுவலருக்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மின்வாரிய பொது தகவல் அலுவலரோ, ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும், கள ஆய்வு நேர்வில் வீடியோ, புகைப்படம்எடுக்க அனுமதி இல்லை என்று மறுத்திருப்பது சட்டவிரோதம். சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அலுவலர்களின் வரம்பு மீறுதலை ஆணையம் கண்டிக்காமல் இருப்பதே இதற்கு காரணம். இதுகுறித்து மீண்டும் மாநில தகவல் ஆணையருக்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x