Published : 18 May 2022 06:17 AM
Last Updated : 18 May 2022 06:17 AM

முதுநிலை ‘நீட்’ தேர்வு மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பு: மத்திய சுகாதாரத் துறைக்கு தருமபுரி எம்.பி கடிதம்

தருமபுரி: முதுநிலை மருத்துவப் படிப்பு ‘நீட்’ தேர்வுக்கான தமிழக விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சருக்கு தருமபுரி எம்பி அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, ‘நீட்’ தேர்வு வரும் 21-ம் தேதி இந்தியா முழுவதும் நடக்க உள்ளது.

பல்வேறு காரணங்களை முன்வைத்து, இந்த தேர்வுக்கான தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவ சங்கம் சார்பிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதுடன், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தருமபுரி எம்பி செந்தில்குமார் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘நடக்க இருக்கும் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஒருவர் சுமார் 900 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தெலங்கானா மாநிலத்தில் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட விண்ணப்பதாரர் ஒருவருக்கு ஆந்திர மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பதன் மூலம் அந்த மாணவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பது மட்டுமன்றி வீண் செலவு, மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வுக்காக தமிழகத்திலும் 31 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தமிழக மாணவர்கள் சிலர் தேர்வு எழுத மிக நீண்ட தூரம் பயணிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழகத்தில் இருந்து முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வீண் அலைச்சலின்றி அருகாமையில் உள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வை எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x