Last Updated : 11 May, 2016 02:14 PM

 

Published : 11 May 2016 02:14 PM
Last Updated : 11 May 2016 02:14 PM

கூடுதல் சிரத்தை.. கடுமையான களப்பணி.. யார் வசமாகும் காட்டுமன்னார்கோவில்?

கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித் தொகுதிகளில் காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. 1962ம் ஆண்டு இந்த தொகுதி உருவானது. சென்னையின் தாகம் தீர்க்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான வீராணம் ஏரி இந்த தொகுதியில் தான் உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இந்த தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கிராமங்களையும், கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களையும் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, ஸ்ரீ முஷ்ணம் ஆகிய பேரூராட்சிகளையும் உள்ளடக்கி இந்த தொகுதி உள்ளது.

காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வர்ன் கோவில், வீரநாராயணபெருமாள் கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூரவாகசாமி கோவில், திருநாரையூர் பொல்லப்பிள்ளையார் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோயில்கள் இங்கு உள்ளன.

வீராணம் ஏரி தூர் வாரப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது காட்டுமன்னார்கோயில் தொகுதி தொடந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் அரசு நிரந்தர தீர்வு காணவில்லை. கிராமச் சாலைகள் சீர் செய்யப்படவில்லை. நலிந்து போன வெற்றிலை விவசாயத்தை காப்பாற்றிட சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதெல்லாம் இப்பகுதி விவசாயம் சார்ந்த மக்களின் நெடுநாளைய தீராத ஆதங்கம். விவசாயிகள் மட்டுமின்றி அவர்களைச் சார்ந்திருக்கிற மற்றவர்களுக்கும் இந்த கோபம் இருப்பது தொகுதியைச் சுற்றி வந்த போது கண்கூடாக தெரிந்தது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் வாக்காளர்கள் 1,07,252,

பெண் வாக்காளர்கள் 1,03,431

திருநங்கை வாக்காளர்கள் 3

மொத்த வாக்காளர்கள் 2,10,688

அதிமுக சார்பில் எம்எல்ஏ முருகுமாறன் போட்டியிடுகிறார். இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, ஐடிஐ கொண்டு வந்ததை கூறி வாக்கு கேட்டு வருகிறார். மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டியிடுகிறார். இவர் சிதம்பரம் தொகுதி எம்பியாக இருந்த போது காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு செய்துள்ள திட்டப் பணிகள் எடுத்து கூறி வருகிறார். மேலும் அனைத்து கூரை வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவேன், வெள்ள பாதிப்புகளை தடுத்திட அருவாமூக்கு திட்டத்தை செயல்படுத்துவேன் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருமாவளவன் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிரத்தினம் போட்டியிருகிறார். இவர் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் திட்டங்களையும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களையும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

பாமக வேட்பாளர் அன்புசோழன் பாமகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை கூறி வாக்கு சேகரித்து வருகிறார். பாஜக சரவணன் மத்திய அரசின் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறார். நாம் தமிழர் கட்சி ஜெயஸ்ரீ, பிஎஸ்பி கலைவாணன் ஆகியோரும் களத்தில் தீவிர இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமாவளவன் இந்த தொகுதியில் நிற்பதால் ஆளுங்கட்சி உள்பட மற்ற அனைத்து கட்சிகளும் மற்ற தொகுதிகளை விட சற்றே கூடுதல் சிரத்தையோடு களப்பணியாற்றுவதை பார்க்க முடிகிறது. இதனால் சக வேட்பாளர்கள், இப்பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள் இடையே சற்றே கூடுதல் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த தொகுதியில் 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மக்கள் நலக்கூட்டணி கட்சியினர் திருமாவளவனை பெற்றி பெற செய்ய வேண்டும் என்று சுழற்று தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அதிமுகவினர் தொகுதியை எப்படியேனும் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மிக நிதானமாக திட்டமிட்டு தேர்தல் வியூகம் அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நட்சத்திர தொகுதியில் திமுகவே பலமானது என்பதை நிருபிப்பதற்காக திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரோடு இரவு, பகல் பாராது தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

பாமகவும் தங்களுக்கு இந்த தொகுதியில் செல்வாக்கு உள்ளது என்பதை உறுதிபடுத்திட தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தற்போது அதிமுக வேட்பாளர் முருகுமாறன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் ஆகிய 3 பேரும் சம பலத்துடன் உள்ளனர். இவர்கள் 3 பேரும் ஆற்றக்கூடிய களப்பணியே இவர்களின் வெற்றியை தீர்மானம் செய்யும். இவர்களுக்கு அடுத்தப்படியாக பாமக வேட்பாளர் அன்பு.சோழன் களத்தில் உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்று இத்தொகுதியின் பிரதிநிதி ஆனால் என்னதான் செய்வார்கள்? இதோ அவர்களே சொல்கிறார்கள்...

முருகுமாறன், அதிமுக வேட்பாளர்

மக்களின் நன்மை கருதி ஸ்ரீமுஷ்ணத்தை தனி வட்டமாக்குவேன். தொகுதியில் மகளிர் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். கள்ளிப்பாடி- காவனூர் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன், வெள்ளத் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு மழை, வெள்ள பாதிப்பில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காப்பற்றிட புதிய திட்டங்கள் கொண்டு வருவேன். கிராம மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதியை அனைத்து கிராமத்துக்கும் செய்து கொடுப்பேன்.

மணிரத்தினம், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்

தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், சாலை வசதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். வீட்டுமனை பட்டா இல்லாமல் தொகுதியில் அதிகம் பேர் உள்ளனர் அவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். வெள்ளத் தடுப்பு நடவடிக்கை, நீர்மேலாண்மை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவேன். படித்துவிட்டு என்ன செய்து என்று தெரியாமல் உள்ள மாணவர்களின் நலன் காத்திட மாணவர்களுக்கு வேலை வழிகாட்டும் மையம் அமைத்திடுவேன்.

திருமாவளவன், மக்கள் நலக்கூட்டணி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்

தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். வீராணம் ஏரியில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இப்பகுதி விவசாயிகளுக்கு 'ராயல்டி' தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பபேன். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவேன். வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா பெற்று தருவேன். தொகுதியில் அரசு கல்லூரி அமைப்பேன். தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்திடுவேன். வெள்ள பாதிப்பை நீக்கிட அருவாமூக்கு திட்டத்தை கொண்டு வருவேன்.

அன்பு சோழன், பாமக வேட்பாளர்

கிராம மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், சுகாதார வசதி செய்து கொடுப்பேன். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர நல்ல திட்டங்களை கொண்டு வருவேன். வீராணம் ஏரியை முழுயாக தூர் வாரி சுற்றுலாத் தலமாக மாற்றிட நடவடிக்கை எடுப்பேன். தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை புரிந்து அதை அவ்வபோது செயல்படுத்துவதில் என் கவனம் முழுவதும் இருக்கும்.

ஸ்டார் தொகுதியான இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவை அறிய தொகுதி வாக்காளர்கள் மட்டுமில்லாது தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

நாமும் காத்திருப்போம் மே 19 ம் தேதி வரை...



இது மக்கள் கருத்து

கல்லூரி மாணவர் முகமது இசாக்

தொகுதியில் அரசு கலைக் கல்லூரி துவக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வகுப்புகள் அரசு சார்பில் நடத்திட வேண்டும். மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வர சரியான நேரங்களில் அரசு பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பேரிசெல்வம்

சாலைகள் சீரமைக்க பட வேண்டும். பேருந்து நிலையத்தை முறையாக பராமரித்து. நிறுத்தப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளையும் கிராமபுறங்களுக்கு இயக்கிட வேண்டும். விவசாயிகளின் நலன் காத்திட புதிய திட்டங்கள் கொண்டு வரவேண்டும்

விவசாயி ராஜேந்திரன்

அனைத்து பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும். எங்கள் தொகுதியில் அதிகளவு மலர் சாகுபடி செய்வதால் வாசனை திரவிய தொழிற்கூடம் அமைக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கும். தொகுதி மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து தடுக்க முறையான திட்டமிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x