

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் பாலினத்தவருக்காக மாநகராட்சி பிரத்யேக கழிப்பறையைக் கட்டி வருகிறது. இதேபோல் பஸ்நிலையம் மற்றும் பொது இடங்களிலும் கழிப்பறைகளை அமைக்க இருக்கிறது.
பொது இடங்களில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறை வசதி இருந்தும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பறை கிடையாது. அதனால், அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாக்காளர் பட்டியல், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசின் அனைத்துத் திட்டங்களிலும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் பொது இடங்களில் அவர்களுக்கென்று தனியாக எந்த வசதிகளும் இல்லை.
2021-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நாடு முழுவதும் 4.88 லட்சம் மூன்றாம் பாலினத்தவர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நாட்டில் டெல்லி, மகராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மூன்றாம் பாலித்தவர்களுக்கென பிரத்யேக கழிப்பறை வசதி உள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் மூன்றாம் பாலின மாணவர்களுக்காக பிரத்யேக கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அவர்களுக்கு பொது இடங்களில் தனி கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருமாறு 2017-ம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், திருநங்கைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்து அங்கு தனியாக குளியல் அறையுடன் கூடிய கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் முதல்முறையாக 2018--ம் ஆண்டு திருச்சி மத்தியப் பேருந்துநிலையத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனிக் கழிப்பறை அமைக்கப்பட்டது.
ஆனாலும், உள்ளாட்சி அமைப்புகள் அவர்களுக்கென பிரத்யேக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதில் தற்போது வரை சுணக்கம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், மதுரையில் முதன் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மீனாட்சியம்மன் கோயில் பகுதியிலும், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுஇடங்களிலும் பிரத்யேகமான கழிப்பறை வசதியைச் செய்து கொடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் கூறுகையில், நகரின் முக்கிய இடங்களில் இனி அமைக்கும் அனைத்துப் பொதுக்கழிப்பிடங்களும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோருக்கென தனித்தனி கழிப்பறைகள் உள்ளவாறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதற்கட்டமாக மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ரூ.35 லட்சத்தில் பிரத்யேக கழிப்பறை வளாகம் கட்டப்படுகிறது. இதேபோல், மதுரை நகரின் மற்ற பேருந்து நிலையங்கள், பொது இடங்களிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக கழிப்பறைகள் கட்டப்படும், என்றார்.