Published : 18 May 2022 06:39 AM
Last Updated : 18 May 2022 06:39 AM

உயிரை பறிக்கும் செல்ஃபி மோகம் - தனுஷ்கோடியில் எல்லை மீறும் சுற்றுலா பயணிகள்

தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரத்தில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் ஆக்ரோஷமாக வீசும் அலையின் அருகே செல்ஃபி எடுத்த உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கும் சுற்றுலாப் பயணி

ராமேசுவரம்: தனுஷ்கோடியில் கடல் அலைகளுக்கு அருகில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் சுய புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.

ராமேசுவரம் தீவுப்பகுதியான தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய கடற்பகுதிகள் ஆண்டில் 6 மாதங்கள் சீற்றத்துடன் காணப்படும். இதனால், இப்பகுதிகளில் கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ் கோடியில் கடலைப் பார்த்த மகிழ்ச்சியிலும், ஆர்வத்திலும் கடலில் இறங்கி குளிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்துக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சீறி எழும் கடல் அலைக்கு அருகே சுய புகைப்படம் (செல்ஃபி) எடுக்க அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் கல்லூரி மாணவர் இந்த மீன்பிடி இறங்கு தளத்தில் சுய புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றதில் உயிரிழந்தார்.

தனுஷ்கோடிக்கு தற்போது புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர் ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி பேர் வரையிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்கவும், ஆபத்தான இடங்களில் சுய புகைப்படம் எடுக்கவும் நிரந்தரமாக தடை விதிப்பதுடன், அறிவிப்புப் பலகைகளை அதிகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, காவல்துறையினரும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும், என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x