

ரயில்வே துறையில் 26 ஆண்டுகள் விபத்தின்றி பணியாற்றிய இன்ஜின் டிரைவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி பொன்மலை ரயில் இன்ஜின் பணிமனையில் டிரைவராகப் பணிபுரிந்து வருபவர் ஏ.நடராஜன்(60). 1976-ல் ரயில்வேயில் கடைநிலை ஊழியராகப் பணியில் சேர்ந்த நடராஜன், 1990 முதல் ரயில் இன்ஜின் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.
நீராவி, டீசல் மற்றும் மின்சார இன்ஜின் ஆகிய அனைத்து வகையான ரயில் இன்ஜின்களையும் இயக்கும் அனுபவம் பெற்ற நடராஜன், கடந்த 26 ஆண்டுகளாக விபத்தின்றி ரயில்களை இயக்கி வருகிறார். அவர் இன்று (மே 31) பணி ஓய்வு பெறுகிறார். அவர் நேற்று (மே 30) காலை மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயிலை இயக்கினார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவருக்கு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள், நினைவுப் பரிசு, இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் பாராட்டுத் தெரிவித்தனர்.
திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.கிரி, ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கச் செயலாளர் தினேஷ்குமார், ஆடிட்டர் சூரியநாராயணன், கும்பகோணம் அனைத்து தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் சத்யநாராயணன், மத்திய கலால் துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.