Published : 14 May 2016 11:57 AM
Last Updated : 14 May 2016 11:57 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரீபார்ம்ஸ்’ (ஏடிஆர்) அமைப்பு வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா ரூ.113 கோடி
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.51 கோடியாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.62 கோடி அதிகரித்து தற்போது ரூ.113 கோடியாக உயர்ந்துள்ளது.
கருணாநிதி ரூ.62 கோடி
திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு கடந்த 2011-ல் ரூ.44 கோடியாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.18 கோடி அதிகரித்து ரூ.62 கோடியாக உயர்ந்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் சொத்து மதிப்பு 2011-ல் ரூ.27 கோடியாக இருந்தது. தற்போதைய பிரமாண பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.64 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக- ரூ.4 கோடி, திமுக- ரூ.5 கோடி
அதிமுகவைச் சேர்ந்த 51 எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக தலா ரூ.4 கோடி வரை உயர்ந்துள்ளது. இதேபோல திமுகவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு தலா ரூ.5 கோடி வரை அதிகரித்துள்ளது.
தேமுதிக ரூ.2 கோடி, பாமக ரூ.1 கோடி
தேமுதிகவைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக தலா ரூ.2 கோடியும் பாமகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியும் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியும் அதிகரித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு தலா ரூ.27 லட்சமும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு தலா ரூ.15 லட்சமும் உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!