

சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக் கோரி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அதிமுக வழக்கறி ஞர் அணி மனு அளித்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் அதன் மாநில துணை செயலாளர் கோபிநாதன் மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது:
சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன், வேட்புமனு தாக்கலின்போது அளித்த ஆவணங் களில் படிவம் 2பி-யில் முக்கியமான தகவல்களை பதிவு செய்யவில்லை. தேர்தல் ஆணைய விதிகளின்படி, இவ்வாறு குறைபாடுள்ள மனுவை ஏற்கக் கூடாது. ஆனால், அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி, மா.சுப்பிரமணியனின் மனுவை நிராகரிப்பதற்கு பதிலாக, புதிதாக 2-வது மனுவைப் பெற்று, தேர்தலில் போட்டியிட அவரை அனுமதித்துள்ளார். இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையிலான தேர்தல் விதிகளுக்கு எதிரானது. அந்த 2-வது மனுவிலும் பல பகுதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மனுவின் 3-வது பக்கத்தில் 3-வது பகுதியை பூர்த்தி செய்யவில்லை.
மேலும், மா.சுப்பிரமணியன் பல வழக்குகளில் சிக்கியுள்ளார். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, அரசு ஊழியர்களை தாக்கியது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதற்காகவே, அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால், விதிகளை மீறி அவரை போட்டியிட அனுமதித்துள்ளனர்.
எனவே, மா.சுப்பிரமணியனின் வேட்புமனுவை நிராகரிப்பதுடன், மனுவை ஏற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
தேர்தல் விதிமீறல் வழக்கு
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என பிரச்சாரம் செய்துவரும் திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர்கள் இ.ராஜா, எம்.மாரப்பன், ஆர்எம்.முத்துக்குமார் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.