

உடுமலை அருகே அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கையும் களவுமாக பிடித்தும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திமுக நிர்வாகியும் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான குப்புசாமி கூறும்போது, ‘மடத்துக் குளம் தொகுதிக்குட்பட்ட கேடிஎல் மில் குடியிருப்பு பகுதியில் அதிமுகவினர் வாக்களர்களுக்கு பணம் வழங்குவதாக தகவல் கிடைத்தது. அதிமுக மகளிர் அணி நிர்வாகி வீட்டில் வைத்து பணப்பட்டுவாடா செய்வதை உறுதி செய்தோம். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் அதனை பெற வந்தவர்களும் வெளியேறி விடாமல், 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் அரண் போல சூழ்ந்து கொண்டோம். தேர்தல் பறக்கும் படை, போலீஸாருக்கும் தகவல் கொடுத்து 1 மணி நேரமாகியும் சம்பவ இடத்துக்கு யாருமே வரவில்லை. இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம்’ என்றார்.
சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இச் சம்பவத்தின் போது அப்பகுதி முழுவதும் மின் தடை இருந்ததால் குடியிருப்பு பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால், கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், தென் மாவட்டங்களில் இருந்து கோவையை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களும் சாலையோரங்களில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.