Published : 17 May 2022 03:42 PM
Last Updated : 17 May 2022 03:42 PM
சென்னை: தமிழகத்தில் மலை கிராமங்கள், தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நேரடியாக மருத்துவர்கள் சென்று மருத்துவ சேவை அளிப்பதற்காக ஏற்கனவே 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு,க,ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவக் களப் பணியாளர் என மருத்துவத் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு மாதத்திற்கு 40 முகாம் என்ற அடிப்படையில் கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு மருத்துவ சிகிச்சையானது இத்திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது
மேலும் தேவையான இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது மக்களுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து அடுத்த கட்ட சிகிச்சைகளும் திட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.70 கோடியில் தொடங்கபட்ட இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களும், குறிப்பாக மலை கிராமங்கள், தொலைதூர கிராமங்களில் உள்ள நோயாளிகள் பயன்பெறும் வண்ணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கிராமங்களில் இல்லம் தேடி சிகிச்சை என்ற முறையில் நடமாடும் மருத்துவ குழுக்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன..
கர்பினிகள், பச்சிளங் குழந்தை பரிசோதனை மற்றுப் பராமரிப்பு , தோல் நோய் மற்றும் காச நோய்களுக்கான தொடர் சிகிச்சை மற்றும் கண்டறிதல், குடும்ப நலவாழ்வு சேவைகள் மற்றும் ஆலோசனைகள்,நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை , இரத்தம், சிறுநீரகம், சளி, இசிஜி போன்ற பரிசோதனைகள் திட்டத்தின் மூலமாக திங்கள் முதல் சனி வரை வாரத்தின் 6 நாட்களில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் 2வது கட்டமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கூடுதலாக 256 நடமாடும் மருத்துவ வாகன சேவையை துவக்கி வைத்தார். மேலும் அந்த வாகனத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதன் மூலம் தமிழகத்தில் நடமாடும் மருத்துவ வாகன சேவை 645 ஆக சுகாதாரத் துறையின் சார்பில் உயர்த்தபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT