“அது சிவலிங்கம் அல்ல, நீரூற்று போன்ற கல்” - கியான்வாபி மசூதி விவகாரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் காட்டம்
சென்னை: கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதியில் இந்துக் கோயில் இருப்பதாகவும், எனவே இங்கு வழிபட தங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மசூதியில் வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்கு மசூதி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மூன்று நாள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து பெண்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை சீல் வைத்து மூட வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சிவலிங்கம் உள்ளது என்ற ஆதாரத்தை மசூதி நிர்வாகம் மறுத்துள்ளது. ஒசுகானாவில் காணப்படுவது சிவலிங்கம் அல்ல. அது அக்குளத்தின் பகுதியாக சேர்த்து கட்டப்பட்ட நீரூற்று என்று கூறியுள்ளனர். இதை குறிப்பிட்ட மசூதி தரப்பின் மனு பரிசீலனை செய்யும் முன்பாகவே நீதிமன்ற உத்தரவு வெளியானது. 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டத்திற்கு மாற்றமாக மீண்டும் ஒரு அராஜகத்தை அரங்கேற்ற மதவாத பாஜக நினைக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. குளத்தில் சிவலிங்கம் என்று இவர்கள் குறிப்பிடும் இடம், தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ அதாவது ஓளு செய்ய பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான். இந்த அலங்காரக் கல்லை இவர்கள் சிவலிங்கமாக கூறி சீல் வைக்க செய்துள்ளனர்.
அலங்கார நீரூற்று கற்கள் முகலாயர் காலத்து மசூதிகளில் மட்டுமல்ல உள்ளூர் மசூதிகளில் பலவற்றில் இருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, மதவாத சக்திகளின் செயல் உள்ளது. பாபர் மசூதியை தொடர்ந்து தற்போது மதவாத சக்திகள் கியான்வாபி மசூதியை குறி வைக்க தொடங்கி விட்டனர். ஆர்எஸ்எஸ்., சங்பரிவார் அமைப்புகளின் அஜெண்டாக்களை மிக வேகமாக மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. இதே நிலை நீடித்தால் சிறுபான்மை சமுதாயம் மட்டுமல்ல, பிற சமுதாயத்தினருக்கும் எதி்ர்காலம் என்பதை மதவாத சக்திகள் கேள்வி குறியாக்கிவிடுவார்கள்.
ஆகவே, மத்திய பாஜக அரசின் மதத்தால் மக்களை பிளவுப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் செயல்களுக்கு அணை போடும் வகையில் மதசார்ப்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்'' என்று முஸ்தபா கூறியுள்ளார்.
