Published : 17 May 2022 04:38 AM
Last Updated : 17 May 2022 04:38 AM

நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக் - ஒரே நாளில் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு

நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் நேற்று தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் வெறிச்சோடி காணப்பட்ட பனியன் நிறுவனம்.

திருப்பூர் / ஈரோடு / சேலம் / கரூர்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

பின்னலாடைத் தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பது வழக்கம். நூல் விலை உட்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படும்.

கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நடப்பு மாதத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்ந்ததால், தொழில்துறையினர் விரக்தியடைந்தனர். வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ. 1 லட்சத்தை எட்டியதால், வரும் மாதங்களில் நூல் விலை மேலும் உயரும் என்ற அச்சம் தொழில்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் பஞ்சை இடம்பெறச் செய்ய வேண்டும். பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்து செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். நூல் இறக்குமதிக்கான வரியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-ம் தேதி (நேற்று), 17-ம் தேதி (இன்று) என 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை பின்னலாடை மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

அதன்படி, திருப்பூரில் நேற்று தொடங்கிய போராட்டத்தில், 90 சதவீதத்துக்கும் மேல் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பங்கெடுத்தன. திருப்பூரில் மட்டும் சுமார் 10 ஆயிரம் நிறுவனங்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது: வேலைநிறுத்தப் போராட்டத்தால் திருப்பூரில் நாளொன்றுக்கு ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும். நாளையும் (இன்று) தொடரவுள்ள போராட்டத்தால் இங்கு ரூ.400 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டீமா உட்பட 37 தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களால் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் பஞ்சை, இந்திய பஞ்சாலைக் கழகம் மூலம் நூற்பாலைகளுக்கு விநியோகிக்க வேண்டும். ஏற்கெனவே நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேல் பஞ்சு பதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றை வெளிக்கொண்டுவர மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முத்துரத்தினம் கூறினார்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், இவ்விரு மாவட்டங்களிலும் 90 சதவீதம் விசைத்தறிகள் இயங்கவில்லை.

ஈரோட்டில் ரூ.100 கோடி பாதிப்பு

இதேபோன்று, நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் ஜவுளி சார்ந்த 25 சங்கங்களின் சார்பில் நடைபெறும் 2 நாள் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேஷன் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கனி மார்க்கெட் தினசரி மற்றும் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்கம், பவர்லூம் கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேஷன், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட 25 சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இதனால், மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளித் தொழில் சார்ந்த கடைகள், உற்பத்தி மையங்கள் நேற்று மூடப்பட்டன. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் குறித்து ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கலைச்செல்வன் கூறும்போது, நூல் மற்றும் பருத்தியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் உற்பத்தியாகும் பருத்தியை, இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்து நேரடியாக ஆலைகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.

சேலத்தில் ஒருநாள் மட்டும்

இதே கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், சேலம் செவ்வாய்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.

நூல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல் குமாரபாளையம் வட்டார ஜவுளித் தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், கரூர் மாவட்டத்திலும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சுமார் 2.50 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x