

நாகர்கோவில்: குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: தூத்தூரைச் சேர்ந்த மரியஜெசின்தாஸ், பூத்துறையைச்சேர்ந்த இம்மானுவேல் ஜோஸ்மற்றும் கேரள மீனவர்கள் உட்பட8 பேர் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் தீவில் இருந்து, விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மார்ச் 7-ம் தேதி இந்தோனேசிய கடற்படையால், அவர்கள் கைதுசெய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். ஏப்ரல் 28-ம் தேதி 4 மீனவர்களை மட்டும்இந்தோனேசிய அரசு விடுதலைசெய்தது. மரிய ஜெசின்தாஸ், இம்மானுவேல், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷிஜின் ஸ்டீபன், ஜெமோன்ஆகிய 4 மீனவர்கள் அங்கு சிறையில் உள்ளனர்.
மரிய ஜெசின்தாஸ் கடந்த 10-ம்தேதி உடல்நலக் குறைவால் மயங்கிவிழுந்துள்ளார். அவரை, இந்தோனேசிய போலீஸார் கடந்த 11-ம்தேதி மருத்துவமனையில் சேர்த்துஉள்ளனர். உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அவர் சுய நினைவு இழந்துள்ளார். சுவாசிப்பதற்கு சிரமம் அடைந்து மோசமான நிலையில் அவர் இருப்பதாக, மரியஜெசின்தாஸின் தாயாரை தொடர்புகொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மரிய ஜெசின்தாஸை இந்தியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தோனேசிய சிறையிலுள்ள எஞ்சிய 3 மீனவர்களையும் மீட்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.