

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே 350 அடிஆழமுள்ள கல்குவாரியில் பாறைகள் நடுவே சிக்கியுள்ள 3 பேரைமீட்கும் பணியில் தேசிய பேரிடர்மீட்புக் குழுவினர் களமிறங்கிஉள்ளனர். எனினும், பாறைகள் தொடர்ந்து சரிவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ளகல்குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ராட்சத பாறை சரிந்துவிழுந்ததில், நாங்குநேரி காக்கைகுளம் லாரி ஓட்டுநர் செல்வகுமார்(30), தச்சநல்லூர் ஊருடையார்புரம் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன்(35), இடையன்குளம் பொக்லைன் ஓட்டுநர் செல்வம் (27), ஆயர்குளம் லாரி கிளீனர் முருகன் (23),விட்டிலாபுரம் முருகன் (40), நாட்டார்குளம் விஜய்(27) ஆகியோர்சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். முருகன், விஜய் ஆகியோர் மீட்கப்பட்டனர். 17 மணிநேரப் போராட்டத்துக்குப் பின்பு மீட்கப்பட்ட செல்வம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புகுழுவைச் சேர்ந்த 30 பேர் நேற்றுமுன்தினம் இரவில் அடைமிதிப்பான்குளம் வந்தனர். நேற்று அதிகாலையில் இருந்து அவர்கள் இரு பிரிவாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணி தொடங்கும்போதே, மேலும் பாறைகள் இடிந்துவிழுந்தன. அவற்றை அகற்றி 3பேரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. நேற்று பகல் 12 மணியளவில் ஒருவரது உடல் பாறைகளுக்குள் சிக்கிஇருப்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். ஆனால், உடலை மீட்கும் பணியைத் தொடங்கியபோது பாறைகள் விழுந்ததால் பணிகள் தடைபட்டன.
மீட்புப் பணிகளை தமிழக வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் நேற்று பார்வையிட்டார். அவர் கூறும்போது, “குவாரியில் பாறைகள் தொடர்ந்து சரிவதால், மீட்புப் பணியினரின் பாதுகாப்பும் முக்கியம். எனவே, நிலைமையைக் கண்காணித்து மீட்புப் பணி தொடரும் தமிழகம் முழுவதும் கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். சட்ட விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கனிமம் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் நிர்மல்ராஜ், தென்மண்டல ஐஜி ஆஸ்ரா கார்க், ஆட்சியர் வே.விஷ்ணு ஆகியோர் உடன் இருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக குவாரி உரிமையாளர் திசையன்விளையைச் சேர்ந்த சங்கரநாராயணன், ஒப்பந்ததாரர் செல்வராஜ், அவரது மகன் குமார், மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது, முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சங்கர நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.