

சென்னை: இந்தியாவில் முதன்முதலாக வெள்ளுடை அலுவலர் சங்கத்தை தொடங்கிய தோழர் சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா மலருக்கு தகவல்கள், கட்டுரைகளை அனுப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் இரா.ராமன், தமிழ்ப் பேராசிரியர் சீ.ரகு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மாகாணத்தில் வெள்ளுடை அலுவலர் (ஒயிட் காலர்டு எம்ப்ளாயீஸ் யூனியன்) சங்கத்தை 1946-ல் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தியவர் தோழர் சுப்பிரமணியன். 1923 மே 13-ம் தேதி பிறந்த இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் தந்தை.
இந்திய நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகளை சட்டப் புத்தக வடிவில் பொதுமக்களிடமும், தொழிலாளர்களிடமும், மனித உரிமை ஆர்வலர்களிடமும் எளிதாக கொண்டுசெல்லும் வகையில், மெட்ராஸ் புத்தக நிறுவனத்தையும் சுப்பிரமணியன் தொடங்கினார்.
இதன்மூலம் தொழிலாளர் நலன் சார்ந்த முக்கிய வழக்குகளின் சாராம்சத்தை வழக்கறிஞர்கள், நிர்வாகம், தொழிற்சங்கங்களிடம் கொண்டுசேர்த்து, தொழிலாளர்களின் தோழராக விளங்கிய சுப்பிரமணியன் 2001-ல் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது சமுதாயப் பங்களிப்பை நினைவுகூர்ந்து பெருமைபடுத்தும் வகையில், சுப்பிரமணியன் நூற்றாண்டு விழா மலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளாம்.
இதற்காக, அவரது மகனும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.வைத்தியநாதன் ‘எந்தையும் தாயும்’ என்ற தலைப்பில் நூற்றாண்டு விழா மலரைத் தயாரித்து வருகிறார்.
இந்த மலர் சுப்பிரமணியனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, 2023 மே மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சுப்பிரமணியனுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், அவரைப் பற்றியும், தொழிற்சங்கத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் தகவல்களையும், கட்டுரைகளையும் தந்து உதவ வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.