Published : 11 May 2016 08:50 AM
Last Updated : 11 May 2016 08:50 AM

ஐஏஎஸ், ஐபிஎஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு: சென்னை இன்ஜினீயர் சரண்யா அரி 7-வது இடம் பிடித்து சாதனை

37-வது இடத்தில் புதுச்சேரி டாக்டர் வைத்தியநாதன்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த இன்ஜினீயர் சரண்யா அரி, தேசிய அளவில் 7-வது இடத்தையும், புதுச்சேரி டாக்டர் வைத்தியநாதன் 37-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 விதமான மத்திய அரசு உயர் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 நிலை களை உள்ளடக்கியது. இத் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது.

கடந்த 2015-ம் ஆண்டுக்கான 1,129 காலியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வின் மெயின் தேர்வு டிசம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சென்னையில் நடந்த தேர்வில் 855 பேர் கலந்துகொண்டனர். இதில் இருந்து சுமார் 2,600 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். நேர்முகத் தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி மே 6-ம் தேதி வரை டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடந்தது.

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவுகள் நேற்று மாலை 4.45 மணி அளவில் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அகில இந்திய அளவில் 1,078 பேர் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அளவில் முதலிடம்

இதில் டெல்லி மாணவி தீனா டாபி முதலிடம், காஷ்மீர் மாணவர் சபி கான் 2-ம் இடம், டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி ஜஸ்மீத் சிங் சாந்து 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னை தாம்பரத்தை சேர்ந்த இன்ஜினீயர் சரண்யா அரி (வயது 26) அகில இந்திய அளவில் 7-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் வைத்தியநாதன் 37-வது இடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் சென்னை ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள்.

தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள சரண்யா அரி, பி.டெக் பட்டதாரி. எஸ்ஆர்எம் பல்கலைக்கழக முன்னாள் மாணவி. அவர் கூறும்போது, ‘‘நான் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது முழுக்க முழுக்க என் பெற்றோரின் கனவு. அவர்களது கனவை நனவாக்கியுள்ளேன். மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்காக உழைப்பேன்’’ என்றார்.

புதுச்சேரி டாக்டர் வைத்திய நாதன், திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த சிபி ஆதித்ய செந்தில்குமார் (72-வது ரேங்க்), தஞ்சாவூரை சேர்ந்த இளம்பகவத் (117-வது ரேங்க்), ஈரோடு சரவணன் (344), சதீஷ் குமார் (607), பாலுமகேந்திரா (730) உள்பட 80-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது ஐஆர்எஸ் அதிகாரியாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் இளம்பகவத், சரவணன் உள்ளிட்டோர் தமிழ்வழியில் தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மற்ற நகரங்களில் இருந்தும், பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் சொந்தமாக படித்தும் மேலும் பல தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. அதுபற்றிய விவரங்கள் இனிமேல்தான் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x