Published : 14 May 2016 02:47 PM
Last Updated : 14 May 2016 02:47 PM

அதிமுகவினர் விழிப்புடன் செயல்பட ஜெ. வேண்டுகோள்

தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து, வாக்குப் பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும், எதிர் தரப்பினர் முறைகேடுகள் எதையும் நடத்திவிடாதபடி கவனமாய் செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில். "சென்னையில் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி, திருநெல்வேலியில் 12.5.2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நடைபெற்ற எனது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும், தெரு முனை பிரச்சாரக் கூட்டங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களையும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து நான் ஆற்றிய உரையினைக் கேட்க லட்சக்கணக்கில் பெண்களும், ஆண்களும் திரண்டு வந்தீர்கள். உங்களுடைய உற்சாகமான வரவேற்பும், அன்பான வாழ்த்துகளும் எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளன.

உங்களுடைய இந்தப் பேராதரவினைப் பார்க்கும் பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை இந்தத் தேர்தலில் பெறப் போவது உறுதி என்ற முழு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களையும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களையும்; புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளிலும்; கேரள மாநிலத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற கழக வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய உங்களிடம் வேண்டுகோள் வைத்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே போட்டியிடுகிறேன் என்ற உணர்வோடு நீங்கள் வாக்களித்து, சிறப்பான வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்குவீர்கள் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை.

கடந்த 2006 முதல் 2011 வரை மாநில அரசிலும், தொடர்ந்து பல ஆண்டுகள் மத்திய அரசிலும் அதிகாரப் பதவிகளில் அமர்ந்து கொண்டு, தமிழக மக்களுக்கு விரோதமாகவும், தேசத்தை சீரழிக்கும் வகையிலும் நடைபெற்ற 2ஜி ஊழல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கட்டப் பஞ்சாயத்து, தமிழ் நாடு முழுவதும் நடைபெற்ற நில அபகரிப்பு, வட்டார தாதாக்களாக திமுக-வினர் நடத்திய ரவுடி ராஜ்ஜியம் ஆகியவற்றையெல்லாம் தமிழக மக்களாகிய நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

மாநிலத்திலும், மத்தியிலும் தங்களுக்கு இருந்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி குடும்பத்தினர் எல்லா தொழில்களையும் தங்கள் வசப்படுத்தி, தமிழகத்தில் இளைய தலைமுறை தொழில் முனைவோரின் வாய்ப்புகளை தட்டிப் பறித்த கொடுஞ் செயல்கள் ஏராளமாக நடைபெற்றதையும் நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள்.

உங்கள் பேராதரவோடு 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நான், திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஒழித்தேன்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீராக நிலை நாட்டினேன்; மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் அளித்தேன்; மின்வெட்டால் இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளிரச் செய்தேன்; தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் புது நம்பிக்கையை ஏற்படுத்தினேன்.

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத வகையில் அரசியலில் போராடி வரும் நான், தமிழ் நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனைகளான காவேரி நதி நீர், முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் நமது உரிமையைக் காப்பாற்றும் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வரை சென்று பெற்று வந்தேன்.

பெண்கள் அனைத்து நிலைகளிலும் முழு உரிமையும், பாதுகாப்பும் பெற்றவர்களாக தலை நிமிர்ந்து வாழ்ந்திட, என்னுடைய ஆட்சிக் காலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்திருக்கும் நான், தற்பொழுது தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட தனிச் சட்டம் உள்ளிட்ட புதிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

காவல் துறையும், அரசின் மற்ற துறைகளும் யாருடைய தலையீடும் இன்றி, எந்தவித குறுக்கீடும் இன்றி முழு சுதந்திரத்துடன் செயல்பட அனைத்து வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்திருக்கிறேன்.

தமிழ் நாட்டில் சிறுபான்மை மக்கள் எந்தவித தொல்லைக்கும் ஆளாகாமல் பாதுகாப்புடன் வாழ்ந்திடவும், பணியாற்றிடவும் எனது அரசு பாதுகாப்பு அரணாக என்றைக்கும் திகழ்ந்து வந்திருக்கிறது.

2011 முதல் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி வந்திருக்கும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தனி மனிதரும் பயன் பெற்றிருக்கின்றனர்.

குறிப்பாகவும், சிறப்பாகவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் உலக அரங்கில் பெற்றிருக்கும் உச்ச நிலையைத் தொடர்ந்து காத்திட, பெருநகரம் முதல் சிற்றூர் வரை எல்லா இடங்களிலும் வாழுகின்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்ட சாதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும்.

இந்த சாதனைச் சரித்திரம் தொடர்ந்திடும் வகையிலும், தமிழகத்தில் விவசாயம், கல்வி, மகளிர் மேம்பாடு, சிறுபான்மையினர் நலன், சிறு, குறு தொழில் வளர்ச்சி ஆகியன மேலும் சிறப்புடன் நடைபெறுவதை உறுதி செய்கின்ற வகையிலும், பல்வேறு வாக்குறுதிகள் உள்ளடங்கிய

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நான் செய்து முடித்திட, 16.5.2016 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும், உங்கள் பொன்னான வாக்குகளை இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' சின்னத்திற்கு அளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அனைவரும் விழிப்புடன் இருந்து, வாக்குப் பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும், எதிர் தரப்பினர் முறைகேடுகள் எதையும் நடத்திவிடாதபடி கவனமாய் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு `இரட்டை இலை' சின்னத்திலும்; கேரள மாநிலத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு `தொப்பி' சின்னத்திலும் வாக்களித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அந்த மாநிலங்களின் வாக்காளப் பெருமக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் தழைத்திட, ஜனநாயகம் காப்போம்! வெற்றி நமதே! அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x