Published : 16 May 2022 07:05 PM
Last Updated : 16 May 2022 07:05 PM

பராமரிப்பு இல்லாத அழகிய மதுரை ரவுண்டானாக்கள்: புதர்மண்டி கிடக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா

திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா.

மதுரை; மதுரையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ரவுண்டானாக்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 'ஸ்வச் ஐகானிக்' திட்டத்தில் மதுரையின் கலாசார சின்னங்களையும், பெருமைகளையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாக்க ரூ.2.4 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் மதுரை மாநகராட்சியின் முக்கிய ரவுண்டானாக்களை அழகுப்படுத்தி, அதில் பசுமைத் தோட்டம், மதுரையின் சிறப்பை பறைசாற்றும் சிலைகள் நிறுவி பாதுகாக்க திட்டமிடப்பட்டன. பாத்திமா கல்லுாரி ரவுண்டானாவில் மீனாட்சியம்மன் கோயில் தேர், பழங்காநத்தம் ரவுண்டானாவில் நாயக்கர் மகாலின் சிம்மாசனம் மற்றும் 10 தூண்கள் நிறுவப்பட்டன. செல்லூர் ரவுண்டானாவில் கபடி வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்கள் விளையாடும் சிலை நிறுவப்பட்டது.

திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் மயில் சிலை கட்டப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது வடமாநிலங்கள் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வருகிறார்கள். அதுபோல், சுற்றுலாப் பயணிகளும் அதிகமானோர் வருகிறார்கள்.

பொதுவாகவே தமிழகத்தில் மயில்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் திருப்பரங்குன்றமும் முக்கியமானது. மேலும், திருப்பரங்குன்றத்தின் அடையாளமாக மட்டுமில்லாது முருகப்பெருமானின் வாகனமாகவும் மயில் கருதப்படுவதால் புதுப்பிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. இந்த மயில் சிலை, அந்த ரவுண்டானா வழியாக செல்வோரை கவர்ந்தது.

இந்த ரவுண்டானா திறக்கப்பட்ட புதிதில் சுற்றிலும் அலங்காரச் செடிகள் வைத்து அதன் மையத்தில் மயில் இருப்பதுபோன்று இந்த ரவுண்டானா வடிவமைக்கப்பட்டது. தொலைவில் இருந்து வருவோர் மனதில் அதில் மயில் இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். திருப்பரங்குன்றம் நுழையும்போது பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிளுக்கும் முருகனின் வாகனமான மயிலை நினைவுப்படுத்தும் வகையில் இந்த ரவுண்டானா அமைந்திருந்தது.

தற்போது இந்த ரவுண்டானா பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது. ரவுண்டாவும் அழுக்குப்படிந்து சுத்தமில்லாமல் சுகாதா சீர்கேடு அடைந்து காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் ரவுண்டானாக்களை பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமைத்துவிட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல், அதனை அந்தந்த மண்டல மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாதப்பட்சத்தில் அரசு நிதியும் வீணடிக்கப்படுவதோடு எந்த நோக்கத்திற்காக இந்த ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டதோடு அதனை நிறைவடையாமல் போய்விடும் என்றும் மக்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x