Published : 16 May 2022 06:17 PM
Last Updated : 16 May 2022 06:17 PM

மே 24 முதல் மனு தாக்கல், ஜூன் 10-ல் வாக்குப் பதிவு: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதியுடன் முடிவடையும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2022 முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்காணும் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது:

> தேர்தல் அறிவிக்கையை வெளியிடும் நாள் மற்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள் 2022 மே 24 (செவ்வாய்க்கிழமை)

> வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2022 மே 31 (செவ்வாய்க்கிழமை)

> வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் நாள் 2022 ஜூன் 1 (புதன்கிழமை)

> வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் 2022 ஜூன் 3 (வெள்ளிக்கிழமை)

> வாக்குப் பதிவு நாள் 2022 ஜூன் 10 (வெள்ளிக்கிழமை)

> வாக்குப் பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

> வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஜூன் 10 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி முதல்

> தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் 2022 ஜூன் 13 (திங்கட்கிழமை)

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.

வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் மே 24-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881-ம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள மே 28 (வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை) மற்றும் மே 29 (ஞாயிற்றுக்கிழமை) தவிர, பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு, தேவைப்படின், "சட்டமன்ற குழுக்கள் அறையில்" ஜூன் 10 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x