

சென்னை: பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது இதில் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், முதல்வரின் செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றனர். மேலும் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த நாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.
தமிழ் மொழி இலக்கணமும், இலக்கியமும் பாரம்பரியமிக்கது. பழமை வாய்ந்தது. உலகின் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி தான். முதல்வர் பேரவையில் அறிவித்தபடி 4500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டை அறிந்து இருந்தனர். தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகளும் உறுதிபடுத்தி இருப்பது பெருமை.
கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது.
பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வேண்டும்.
தமிழை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி இருக்கைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார்.