Published : 16 May 2022 12:11 PM
Last Updated : 16 May 2022 12:11 PM

நூல் விலை உயர்வு | பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக, இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். தற்போதுள்ள நிலைமை மற்றும் தமிழகத்தின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்த போதும், நிலைமை சீரடையாத காரணத்தால், பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழல் தமிழகத்தில் ஜவுளித் தொழிலுக்குப் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்து. அதிக எண்ணிக்கையிலான நூற்பு, நெசவு மற்றும் ஆடை அலகுகள், அவற்றின் செயல்பாட்டு மூலதனத்தின் நீடித்த தேவைகள் மற்றும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வாங்குபவருக்கு வழங்குவதற்கான ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கு இடையே விலை பொருந்தாததால் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இதனால், ஆடை உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பாரம்பரியமாக வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் துறையில் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவுத் துறையில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நூலை கொள்முதல் செய்ய முடியவில்லை. துணி நெசவு செய்வதற்கும் தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி தமக்கு கவலையளிக்கிறது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, விலைவாசி உயர்வையும், அதன் விளைவாக ஏற்படும் இடையூறுகளையும் கட்டுப்படுத்திட பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

> உடனடி நடவடிக்கையாக, பருத்தி மற்றும் நூலுக்கான இருப்பு தொடர்பான அறிவிப்பினை அனைத்து நூற்பாலைகளுக்கும் கட்டாயமாக்கப்படலாம். இதன்மூலம் பருத்தி வியாபாரிகள் பருத்தி மற்றும் நூல் கிடைப்பது குறித்த உண்மையான தரவுகளைப் பெற முடியும்.

> மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் 30, 2022 வரை தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு சரக்குகள் இந்தியத் துறைமுகங்களை வந்தடைய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், இறக்குமதி வரி விலக்கு 2022, ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். எனவே, செப்டம்பர் 30 வரை உள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் இறக்குமதி வரி விலக்கு கிடைக்கும் என்று மத்திய அரசு தெளிவான விளக்கங்களை வழங்கலாம்.

> தற்போது, நூற்பாலைகளுக்கு பருத்தி வாங்குவதற்காக ரொக்கக் கடன் வரம்பை மூன்று மாதங்களுக்கு மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, பருத்தி கொள்முதல் செய்வதற்கான நூற்பாலைகளின் ரொக்கக் கடன் வரம்பினை ஓராண்டில், 8 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம். இதேபோல், வங்கிகள் வாங்கும் மதிப்பில் 25 விழுக்காடாக உள்ள விளிம்புத் தொகை 10 விழுக்காடாகக் குறைக்கப்படலாம்.

ஏனெனில், வங்கிகள் வாங்கும் பங்கு மதிப்பை சந்தையில் உண்மையான கொள்முதல் / சந்தை விகிதங்களை விட குறைவான விலையில் கணக்கிடுகின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x