

வாக்கு எண்ணிக்கை விவரங்களை கேட்டு, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை, திமுக சார்பில் மு.அப்பாவு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அந்த தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் எனக் கோரி, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக வேட்பாளர் அப்பாவு மனு அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகம் வந்த அப்பாவு, ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில், ‘ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக வேட்பாளர் இன்பதுரை அதிக வாக்கு பெற்றதாக அறிவித்ததை எதிர்த்தோம். இதனால், எங்களை வெளியில் அனுப்பிவிட்டு, 19, 20, 21-வது சுற்றுக்கள் மற்றும் தபால் ஓட்டுகளை எண்ணி தவறான முடிவு அறிவிக்கப்பட்டது. 599 வாக்குகள் அதிகம் பெற்ற என்னை வெற்றி பெற்றவர் என அறிவிக்காமல், அதிமுக வேட்பாளர் 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற தாக அறிவித்தனர். இந்த சம்பவங் கள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல உள்ளேன். அதற்கு சிசிடிவி பதிவுகள் உட்பட சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை தகவல் உரிமைச் சட்டப்படி கேட்டுள்ளேன். காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து, விரைவாக கொடுத்து உதவ வேண்டும்.
இவ்வாறு மனுவில் அப்பாவு கூறியுள்ளார்.