Published : 16 May 2022 07:12 AM
Last Updated : 16 May 2022 07:12 AM
ரஷ்யா - உக்ரைன் போரால், உக்ரைனில் மருத்துவம் படித்துவந்தவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். மீண்டும் அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்புத் தலைவர் எம்.ஆர்.குணசேகரன், பொதுச் செயலர் வி.கண்ணன், பொருளாளர் எஸ்.திலீப்குமார், ஒருங்கிணைப்பு செயலர் டாக்டர் என்.ராமநாதன் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: உக்ரைன் போர் காரணமாக, அங்கு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் 1,896 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். தற்போது மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர். இதே நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 16 ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றனர். இதில், 4 ஆயிரம் பேர் இறுதியாண்டு மாணவர்கள்.
அவர்கள் இந்தியாவில் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 67 மருத்துவக்கல்லூரிகள் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 600 உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் 27 இடங்களை அதிகரித்தால் மீதமுள்ள 12 ஆயிரம் மாணவர்களுக்கு இடம்அளிக்க முடியும். புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது.
இந்தக் கல்லூரிகளில் 2 முதல்5 ஆண்டு வரையுள்ள மாணவர்களைச் சேர்க்க முடியும். பல மாநிலஅரசுகள் தங்கள் மாணவர்கள் இங்கேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாகவும், மத்திய அரசு அனுமதிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளன. அதனால், அந்தந்த மாநிலங்களில் மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “உக்ரைன் போலவே மருத்துவப் படிப்புக்கான பாடப்பிரிவுகள் இருக்கும் மற்ற நாடுகளில் மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசும் அதே பாடப்பிரிவு உள்ள போலந்து உள்ளிட்ட 5, 6 நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதால், 2 மாதங்களுக்குள் புதிய வழிகாட்டு முறையை கொண்டு வரும்படி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT