

சென்னை: பாமக தொண்டர்களுக்கு கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, அவருக்கு கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
தொண்டர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், துடித்துக்கொண்டு போய் உதவுவார். அதனால்தான் 1998 முதல் இப்போது வரை தொடர்ந்து 12 முறை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 25-வது ஆண்டாக இப்பதவியை வகிக்கிறார்.
பாமக தலைவர் பதவியில் ஜி.கே.மணியின் வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில், கட்சி சார்பில் வரும் 24-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. எனது தலைமையில் நடக்கும் இந்த விழாவில் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.