Published : 16 May 2022 07:46 AM
Last Updated : 16 May 2022 07:46 AM

மற்றொரு மொழியை குறைகூறுவது மற்றொரு மாநிலத்தை துன்பப்படுத்துவதாகும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து

புதுக்கோட்டை: மற்றொரு மொழியை நாம் குறைகூறுவது, மற்றொரு மாநிலத்தை நாம் துன்பப்படுத்துவதாகும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், அங்குள்ள சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணியை பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான சுற்றறிக்கையில் தமிழையே முதன்மைப்படுத்த வேண்டும் என்று உள்ளது. அதை நான் தெளிவுபடுத்திவிட்டேன்.

அதிலும், குறிப்பாக முதலில் தமிழிலும், 2-வது ஆங்கிலத்திலும், 3-வது இந்தியிலும் இருக்க வேண்டும் என்று உள்ளது. ஜிப்மரில் இந்தி திணிக்கப்படவில்லை. அங்கு மட்டுமல்ல, புதுச்சேரியில் எந்த இடத்திலும் இந்தி திணிக்கப்படாது. ஆனால், உண்மையை புரிந்துகொள்ளாமல் தினமும் ஜிப்மர் வாசலில் நின்று போராட்டம் செய்வது, ஒலிபெருக்கிகளை வைத்து நோயாளிகளுக்கு தொந்தரவு செய்வது நல்லதல்ல.

எங்களைவிட தமிழ் பற்றாளர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழில் பதவியேற்று, தமிழில் ஆளுநர் உரையாற்றி இருக்கிறோம்.

நம் மொழி மீது அன்பும், பாசமும் இருக்க வேண்டும். இன்னொரு மொழி மீது எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஏனெனில், அது இன்னொருவரின் தாய்மொழி. இதைப் புரிந்துகொள்ளாமல், மற்றொரு மொழியை நாம் குறைகூறுவதன் மூலமாக, மற்றொரு சகோதரத்துவ மாநிலத்தை நாம் துன்பப்படுத்துகிறோம்.

நாம் அனைவரையும் மதிக்க பழகியவர்கள். தமிழ் கலாச்சாரம் என்பது உலகளவில் மதிக்கக்கூடிய ஒன்று. ஆகையால், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நம் மொழியை கொண்டாட வேண்டும் என்றார்.

அமைச்சர் வரவேற்பு

பொன்னமராவதியில் உள்ள தங்கும் விடுதியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மாநில அமைச்சர் எஸ்.ரகுபதி வரவேற்றார். பின்னர், திருமண விழாவில் இவர்கள் இருவருடன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x