

கோவை: கோவில்பாளையம் அருகே உள்ளசர்க்கார் சாமக்குளத்தில் (காலிங்க ராயன் குளம்) சுமார் ரூ.5.48 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தப்பணியில் 150 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணிவிடுபட்டுள்ளது. இந்த குளத்துக்கு விரைவில் அத்திக்கடவு-அவிநாசிதிட்டத்தின் மூலம் நீர்வரத்து கிடைக்க உள்ள நிலையில், குளத்தை முழுமையாக தூர்வாரி னால்தான் அதிகப்படியான நீரை தேக்கி வைக்க முடியும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, பொதுமக்கள் கூறும்போது, “கடந்த 40 ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது மேற்கொள்ளப் படும் பணியில் கரைகளை பலப்படுத்த கான்கிரீட் அமைத்தல், மதகு சீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இந்த குளம் இணைக்கப்பட்டது. நிலத்தடி செறிவூட்டும் திட்டத்தில் இந்த குளம் இணைக்கப்பட்டுள்ளதால் பாசனத்துக்கு இந்த நீரை பயன்படுத்தப்போவதில்லை.
ஆனால், இங்குள்ள மதகை சரிசெய்ய செலவு செய்துள்ளனர். இதனால், யாருக்கும் பயனில்லை.
குளத்தை தூர்வாரினால் அந்த மண்ணை கரைகளை பலப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். குளத்தின் கரைகளை அகலப்படுத்தி, உயரப்படுத்தலாம். குளத்தின் எல்லையை வரையறுத்து, பின்பக்கமும் கரையை அமைக்கலாம். இதன்மூலம் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தவிர்க்க முடியும். இந்தப் பணிகளை செய்தால், மண்ணை எங்கும் வெளியே கொண்டு செல்ல வேண்டியதில்லை.
எஞ்சியுள்ள மண்ணை அரசே நேரடியாக தேவைப்படும் விவசாயிகளுக்கு அளிக்கலாம். ரூ.5.48 கோடிசெலவு செய்து சீரமைப்புப் பணிகளை செய்துவிட்டு, தண்ணீரை தேக்க எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் செலவு செய்த தொகைக்கு முழு பயன் இல்லாமல் போய்விடும். எனவே, குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தினால் அதன் முழுகொள்ளளவான 11.80 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்” என்றனர்.
தூர்வார நடவடிக்கை
இதுதொடர்பாக, பொதுப் பணித் துறையினர் கூறும்போது, “தற்போதைய திட்ட மதிப்பீட்டில் தூர்வாரும் பணி சேர்க்கப்படவில்லை. அதற்கு தனியே நிதி ஒதுக்கப்படவில்லை. அந்த குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தினால் அதிக நீரை தேக்கிவைக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேறொரு திட்டத்தின் கீழ்தான் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முடியும். அதற்கு முயற்சி செய்து வருகிறோம். பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதி கிடைத்தாலும் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றனர்.