

திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் பாமக உள்ளது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்து, தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். கடைசி 2 மாதத்தில் சில ஊடகங்கள் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பை வெளியிட்டன.
இங்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறவில்லை. முதல் ஊழல் கட்சி திமுக. இரண்டாவது ஊழல் கட்சி அதிமுக. தேர்தலில் இரண்டு கட்சிகளும் ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரை பணத்தை செலவு செய்தன. எல்லாம் கருப்புப் பணம்.
இந்த தேர்தலில் பாமக 5.3 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் பாமக உள்ளது. தேர்தலில் ஊழல் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து நின்றன. மாற்றத்தை கொண்டு வரும் தகுதி அன்புமணிக்கு மட்டும்தான் இருந்தது. ஆனால் அன்புமணிக்கு ஊடகங்கள் துணை நிற்கவில்லை.
தமிழகத்தில் 70 லட்சம் கோடி தாது மணல் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கடன் அதிகரிக்கும். கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா 5 முறை மட்டுமே பத்திரிகையாளரை சந்தித்துள்ளார்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
பேட்டியின்போது கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.