Published : 16 May 2022 06:24 AM
Last Updated : 16 May 2022 06:24 AM
சென்னை: புதிய கல்விக் கொள்கை கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ‘தேசிய கல்விக் கொள்கை புறக்கணிப்பு’ என்ற தலைப்பிலான தேசிய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். இதில், அமைச்சர் கே.பொன்முடி பேசியதாவது:
புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான உணர்வு தேசிய அளவில் பரவ வேண்டும். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்போல, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டமும் வெற்றி பெறும்.
மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. கூட்டாட்சி அமைப்பு கொண்ட இந்தியாவின் சிறப்பம்சமே, வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் முதல்வர் கருணாநிதி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தினார். அதனால்தான் ஓபிசி வகுப்பினருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தது.
அனைத்து தரப்பினருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி.
கல்வி முன்பு மாநிலப் பட்டியலில் இருந்தது. பின்னர் அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால்தான், நீட் தேர்வு, மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வுக்கு இணையான தேர்வு நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆரம்பக் கல்வி நிலையிலேயே இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது. மீண்டும் குலக்கல்வி முறையைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
மூன்றாவது மொழியை விருப்ப அடிப்படையில் கற்கலாமே தவிர, அதை கட்டாயமாக்கக் கூடாது. தமிழகத்தில் விரைவில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “சம்ஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதை எப்படி ஏற்க முடியும், கல்வியை தனியார்மயமாக்கவும், வணிகமயமாக்கவும் முயற்சி செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் ஆன்லைன் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு குறித்து எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. எனவே, புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்கக் கூடாது” என்றார்.
கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து பேசும்போது, “பன்முகத்தன்மை மிக்க இந்தியாவில், ஒற்றைத்தன்மையை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. கல்வியை காவிமயமாக்கப் பார்க்கிறார்கள். பின்தங்கிய பிரிவினர் கல்வி கற்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும்” என்றார்.
மகாராஷ்டிர மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜித்தேந்திர அவாத் பேசும்போது, “தேசிய கல்விக் கொள்கை என்று சொல்லக்கூடாது. தேசிய சீரழிப்புக் கொள்கை என்றுதான் கூற வேண்டும். அது இந்திய கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கிறது. கல்வி தனியார்மயமானால், அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்காது” என்றார்.
மாணவர் பெருமன்ற பொதுச் செயலர் ஆர்.திருமலை, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி.ராஜா நிறைவுரையாற்றினார். கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எம்.குணசேகர் நன்றி கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலர் இரா.முத்தரசன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT