Published : 16 May 2022 06:29 AM
Last Updated : 16 May 2022 06:29 AM

கோடைகாலம் என்பதால் விளைச்சல், வரத்து குறைவு; கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.70 ஆக உயர்வு: பண்ணை பசுமை கடைகளில் ரூ.50-க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

கோடை காலங்களில் தக்காளி விலை உயர்வது வழக்கம். முந்தைய ஆண்டுகளிலும் ரூ.40 வரை விலை உயர்ந்தது. ஆனால், இந்த ஆண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் கிலோ ரூ.20, ரூ.30-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, கடந்த 2 வாரங்களாக ரூ.50-க்கு மேல் உயர்ந்து, நேற்று கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது. திருவல்லிக்கேணி ஜாம் பஜார், சைதை, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை சந்தைகளில் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டது.

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.65, அவரைக்காய் ரூ.50, முருங்கைக்காய் ரூ.40, பீட்ரூட், புடலங்காய் ரூ.20, பாகற்காய், கேரட், வெண்டைக்காய் ரூ.30, கத்தரிக்காய் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.18, முள்ளங்கி, நூக்கல், கருணைக்கிழங்கு ரூ.15, பச்சை மிளகாய் ரூ.12, முட்டைக்கோஸ் ரூ.12 என விற்கப்படுகிறது.

தக்காளி விலை உயர்வு குறித்து கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:

சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.10-க்கும் கீழ் குறைந்தது. விலை வீழ்ச்சியால் பல விவசாயிகள் தக்காளி பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஒருசிலரே தைரியமாக தக்காளி பயிரிட்டனர். தவிர, கோடை காலத்தில் செடிகளில் காய் பிடிப்பது குறையும். வெயிலுக்கு செடிகளும் தாங்காது. இதனால் தக்காளி உற்பத்தி குறையும். இதனால், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. இன்னும் 2 வாரங்களுக்கு பிறகு, விலை குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், கூட்டுறவு துறை சார்பில் பண்ணை பசுமை கடைகளில் வெளிச் சந்தையைவிட குறைவான விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. இதுபற்றி திருவல்லிக்கேணியில் உள்ள டியுசிஎஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்களது பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. விலை மேலும் உயரும் பட்சத்தில், ஆந்திரா, கர்நாடகா எல்லைப் பகுதிகளில் இருந்து கூடுதலாக தக்காளி வரவழைத்து விற்க திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x