Published : 16 May 2022 06:33 AM
Last Updated : 16 May 2022 06:33 AM
சென்னை: என்னுடைய முன்னேற்றத்துக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் சண்முகநாதனும் ஒருவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த மறைந்த சண்முகநாதனின் பேரன் ஆர்.அரவிந்த்ராஜ் - வி.பிரியதர்ஷினி ஆகியோரின் திருமணம், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு சண்முகநாதனுக்கு முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் திருமணம் நடந்தது. பாலர் அரங்கமாக இருந்து கலைவாணர் அரங்கமாக மாற்றப்பட்ட பிறகு முதல் நிகழ்ச்சி அதுதான். அப்போது சண்முகநாதனுக்கு நானும், என் அண்ணன் அழகிரி மற்றும் சகோதரர்கள் அனைவரும் மாப்பிள்ளை தோழர்களாக இருந்து நடத்தி வைத்தோம். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும், கருணாநிதிக்கு ஒரு மகனாகவும் கடைசி வரையில் இருந்தார்.
1967-ல் திமுக ஆட்சி அமைந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, தனது உதவியாளராக சண்முகநாதனை கேட்டுப் பெற்றார். அன்றுமுதல் இறுதிவரை கருணாநிதியுடன் இருந்தார். கருணாநிதி மறைவுக்குப் பிறகும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து செல்வார்.
இன்றைக்கு நான் இந்த அளவுக்கு முன்னேற்றத்தை, மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு பெருமை பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு முக்கியமான காரணகர்த்தாக்களில் சண்முகநாதனும் ஒருவர் என்பதை என்றும் மறக்க மாட்டேன். இன்று கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட புத்தகங்கள் வெளியில் உலவிட காரணம் சண்முகநாதன்தான்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT