Published : 16 May 2022 06:53 AM
Last Updated : 16 May 2022 06:53 AM

மண்டலக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்களுக்கு தடை: சென்னை மாநகராட்சி உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை: மாநகராட்சி மண்டலக் கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்ற சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறைகளின் செயலர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அண்மையில் சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள், நிலைக்குழுக் கூட்டங்களுக்கோ, மண்டலக் கூட்டங்களுக்கோ வருகைதரக் கூடாது என்ற முடிவை எடுத்திருப்பதாக செய்தி வெளிவந்தது. இந்த முடிவைப் பாராட்டுகிறோம்.

அனைத்து மன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள் சுயமாக இயங்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதும், அவர்களது பணிகளை கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் செய்வதைத் தடுப்பதும் மிகவும் முக்கியமானது.

பெயருக்கு அவர்களை தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்களது பணிகளை எல்லாம் பினாமியாக தந்தையோ, கணவரோ அல்லது மற்றவர்களோ மேற்கொள்ளும் நிலையை ஒருபோதும் ஏற்கக்கூடாது.

பினாமிகள் செயல்பாடு

பட்டியலின, பழங்குடியின கவுன்சிலர்கள் வேறுவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு இடங்களில் இடஒதுக்கீட்டின் காரணமாக பட்டியலின, பழங்குடியின வேட்பாளர்களை, சாதி ஆதிக்க, பொருளாதார ஆதிக்க சக்திகள் நிறுத்தி வெற்றிபெறச் செய்து, அவர்கள் பினாமியாக செயல்படுகின்றனர்.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், தலைவர்கள் தவிர வேறு யாரும் கூட்டங்களுக்கு வருவதற்கும், அவர்களது பணிகளை செய்வதற்கும் அனுமதி இல்லை என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும்.

இதை மீறி மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களை செயல்பட அனுமதிக்கும் அதிகாரிகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x