

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை சிறை யில் அடைக்கப்பட்டுள்ள ரவிச் சந்திரனுக்கு 7-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள சூரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது தாயார் ராஜேஸ்வரிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக 2021 நவ.17 முதல் ஒரு மாதம் பரோலில் சூரப்பநாயக்கன்பட்டிக்குச் சென்றார். அப்போது அவ ருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மருத்துவர்களின் ஆலோ சனைப்படி சிகிச்சை, ஓய்வு தேவை என்ற அடிப்படையில் டிச.17-ல் இருந்து ஜன.15 வரை, ஜன.15-ல் இருந்து பிப்.15 வரை, பிப்.15-ல் இருந்து மார்ச் 15 வரை, மார்ச் 17-ல் இருந்து ஏப்.15 வரை, ஏப்.16-ல் இருந்து மே 15 வரை என அடுத்தடுத்து பரோல் நீட்டிக்கப் பட்டது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவருக்கு இதய பாதிப்பு, மன அழுத்தம் இருப்பதால் கூடுதல் ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பை மேலும் நீட்டிக்குமாறு அவரது தாயார் மற்றும் வழக்கறிஞர் திருமுருகன் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மே 16-ல் இருந்து ஜூன் 15 வரை பரோலை நீட்டித்து தமிழக உள்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என அவரது வழக்கறிஞர் தெரி வித்தார்.