Published : 11 May 2016 09:03 AM
Last Updated : 11 May 2016 09:03 AM

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு கருணாநிதி, வீரமணி, அன்புமணி எதிர்ப்பு

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு திமுக தலைவர் கருணாநிதி, தி.க. தலைவர் கி.வீரமணி, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி:

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக மருத்துவம், பொறி யியல், பல் மருத்துவப் படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து திமுக அரசு கடந்த 2007-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், திமுக அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் தது.

இந்த சூழலில்தான், நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2010-ம் ஆண்டு அறிவிக்கை வெளியிட்டபோது, அதை எதிர்த்து திமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தது. அந்த வழக்கிலும் திமுக அரசின் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்குதான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில், நுழைவுத் தேர்வு ரத்துக் காக திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் பற்றி, அதிமுக அரசு சார்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள் விரிவாக பேசவில்லை. இதனால்தான் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பு வெளி யாகியுள்ளது. திமுக ஆட்சி அமைந்தால் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.க. தலைவர் கி.வீரமணி:

மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்று 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தற்போது அதற்கு மாறாக தீர்ப்பு அளித்துள்ளது. இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு தேவை இல்லை என்று இந்திய மருத்துவ கவுன்சிலே கூறியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இப்படி தீர்ப்பு வழங்கியிருப்பது வெகுமக்க ளின் உணர்வுக்கு எதிரானது. நுழைவுத் தேர்வை நீக்க அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும். இதற்கான அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர வேண் டும். ஒருவேளை 13 -ம் தேதிக்குள் இரு அவைகளிலும் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முடியாவிட்டால், மே 13-ம் தேதி நடப்பு கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் இதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்.

டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேசியதாவது: நுழைவுத் தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக மாணவர்களின் நலன்களை காத்திட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களுக்கும் (இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவம்) மாநில அரசுகள்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x