அகத்தியர் அருவியில் சாலை, இருக்கை, பாதுகாப்பு ஏதுமில்லை; சுற்றுலா பயணிகள் அவதி: அடுக்கடுக்காக கட்டணம் வசூலிப்பதுதான் வனத்துறையின் நோக்கமா?

அகத்தியர் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன.
அகத்தியர் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன.
Updated on
3 min read

திருநெல்வேலி: பாபநாசம் அருகே அகத்தியர் அருவி வளாகத்தில் எவ்வித வசதிகளும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதியுறுகிறார்கள். பல்வேறு வகையில் கட்டணங்கள் வசூலிக்கும் வனத்துறை பாராமுகமாக இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் கொட்டும் பாபநாசம் அகத்தியர் அருவி, பயணிகளை கவர்ந்திழுக்கும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. சுற்றுலா மற்றும் ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த அகத்தியர் அருவிக்கு, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். அம்பாசமுத்திரம் முதல் பாபநாசம் வரையுள்ள வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைத்து வந்தது. பாபநாசம்- முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் இந்த அருவி அமைந்திருப்பதால், சமீப ஆண்டு களாக வனத்துறை பல்வேறு கெடுபிடிகளை அமல் படுத்தி, சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு தொந்தரவுகளை அளிக்கிறது.

அடுக்கடுக்காக கட்டணம்

அருவிக்கு அருகில் உள்ள நீர்மின் நிலையம் அருகே வனத்துறையினர் செக் போஸ்ட் அமைத்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்கின்றனர். இங்கு இந்தியர்களின் கனரக வாகனங்களுக்கு ரூ.100, கார், வேனுக்கு ரூ.50, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட்டுக் ரூ.20, வெளிநாட்டவரின் கனரக வாகனங்களுக்கு ரூ.1,000, கார், வேனுக்கு ரூ.500, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட்டுக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர அருவியில் குளிப்பதற்கு, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ரூ. 5, சிறுவர்களுக்கு (5-12 வயது) ரூ. 20, பெரியவர்களுக்கு - ரூ.30, கேமராவுக்கு - ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது. இதுபோல் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு (5-12 வயது) ரூ.200-, 5 வயதுக்கு கீழ் ரூ.50, பெரியவர்களுக்கு ரூ.300, புகைப்படக் கேமராவுக்கு -ரூ.500, வீடியோ கேமராவுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அருவிக்கு அருகே வனத்துறை நடத்தும் 2 கடைகளில் கிடைக்கும் தரமற்ற பொருட்களை வாங்கித்தான் பசியாற வேண்டும்.

அம்பாசமுத்திரத்தில் இருந்து அகத்தியர் அருவிக்கு ஓரிருமுறை இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. பாபநாசம் கோயில் அருகேயிருந்து அருவி வரை, நபருக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி ஆட்டோவில் சென்று வந்தனர். தற்போது, ஆட்டோக்களை வனத்துறை அனுமதிப்பதில்லை. இதனால், பைக் அல்லது காரில் மட்டுமே அருவிக்கு செல்ல முடியும். வாகன வாடகை, பார்க்கிங் கட்டணம், குளிப்பதற்கு கட்டணம் என பல்வேறு இனங்களாக வனத்துறை கட்டணம் வசூலிப்பதால், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அகத்தியர் அருவிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வசதிகளே இல்லை

இவ்வளவு கட்டணத்தை வசூலிப்பதில் அக்கறை காட்டும் வனத்துறை அடிப்படை வசதிகளை செய்ய மறுக்கிறது. காரையாறு மலைச்சாலையில் இருந்து அகத்தியர் அருவிக்கான கிளைச்சாலை முற்றிலும் பெயர்ந்து, நடக்கக்கூட பயனற்ற நிலையில் உள்ளது. அருவிக்கு செல்லும் நடைபாதையில் கற்கள் பெயர்ந்து புதைகுழி போல் காணப்படுகிறது. அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு வேலி சேதமடைந்து பாதுகாப்பின்றி உள்ளது. பெண்கள் உடைமாற்றும் அறை அசுத்தமாக உள்ளது.

நடை பயிற்சிக்கு தடை

பாபநாசம், வி.கே.புரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அகத்தியர் அருவிக்கு பிரிந்து செல்லும் சாலை வரை நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கரோனா சமயத்தில் நடைப்பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்தது. இத்தடை இதுவரை விலக்கப்படவில்லை.

இதற்குமுன், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அருவிக்கு செல்ல அனுமதித்த அளித்தனர். தற்போது காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

தற்போது வெயில் சுட்டெரிப்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர்.

அடுத்த மாதம் சாரல் காலம் தொடங்க இருக்கிறது. இதனால் இங்கு அடிப்படை வசதிகளை துரிதமாக நிறைவேற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in