

கைத்தறி, ஆதிதிராவிடர் நலம் மற்றும் வனத்துறைகளில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த ஐந்தாண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என கருணாநிதியும், திமுகவினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை 17 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவித்தேன். தற்போது மேலும் 3 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் அளிக்கப்படுகிறது.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை:
கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் மாநில அரசின் பங்கு 4 லிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் வீடுகள், கூடுதலாக நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது வழங்கப்பட்டுள்ளது.
பட்டுரக துணிகளின் விற்பனைக்கு உச்சவரம்பின்றி 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்:
மாநில போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, விடுதி மாணவர்கள் சேர்க்கை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம், 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
வனவிலங்குகளால் ஏற்படும் உயிர், பயிர், உடமை சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டத்தில் 2011 முதல் 2015 வரை 14ஆயிரத்து 335 எக்டேர் பரப்பில் தேக்குமரத்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக வனத்துறையில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற பதவிகளில் நேரடி நியமன காலிப்பணியிடங்களை நிரப்ப‘ தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வனத்துறையினருக்கு காவல்துறையினருக்கு இணையாக சீருடை, சலவை மற்றும் இடர்ப்படிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு உயிர்ப்பன்மை மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தில் ஆயிரத்து 18 வருவாய் கிராமங்களில் ஒரு கோடியே 82 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மனித- வன உயிரின மோதல்களை எதிர்கெளாள்ளும் வகையில், ஊட்டி, கிருஷ்ணகிரி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் மூன்று அதிவிரைவு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மரபு வழியாக சந்தன மரங்கள் வளரும் பகுதிகளான ஜவ்வாதுமலை, சேர்வராயன் மலை, கொல்லிமலை, பச்சைமலை மற்றும் சித்தேரி மலைப்பகுதிகளில் சந்தன மரங்களை வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் 25 இடங்களில் தொடர் காற்று தரக்கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.