கல்வித்துறையை சீரழித்த திமுக, அதிமுக: ஜி.ஆர். குற்றச்சாட்டு

கல்வித்துறையை சீரழித்த திமுக, அதிமுக: ஜி.ஆர். குற்றச்சாட்டு
Updated on
2 min read

மாறிமாறி ஆட்சிக்குவந்த திமுகவும், அதிமுகவும் ஊழல் முறைகேடுகளால் கல்வித்துறையை சீரழித்தன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் லஞ்ச. ஊழல், முறை கேடுகளை திமுக அதிமுக ஆட்சிகள் தொடர்கதையாக்கியுள்ளன. தனியார் பள்ளிகளின் கட்டணம் மற்றும் கல்வித்தரம் மீதான சமூகக் கட்டுப்பாடு இல்லாமல் கொள்ளைக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை நிர்வாகங்கள் ஊழல் முறைகேடுகளால் சீரழிக்கப்படுகின்றன.

அதிமுக ஆட்சியில் 2011-12 முதல் 2015-16 வரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல மாணவர் விடுதிகளுக்கு (150 மாணவர்களுக்கு மேல் தங்கிப் படிக்கும் விடுதிகளுக்கு) நீராவி கொதிகலன்கள் வாங்க அரசு முடிவு எடுத்து 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு செய்தார்.

மாநிலம் முழுவதும் இந்த ஒப்பந்தத்தை ஒரே நபருக்கு கொடுத்துள்ளனர். அதில் குறைந்த விலையிலான கொதிகலன்களுக்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதிலும் முறைகேடு நடந்துள்ளது.

திமுக ஆட்சியின்போது இதே துறையில் கல்வி உதவித்தொகை ஊழல் நடைபெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது. இல்லாத தொழிற்பயிற்சி நிலையங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து தலித் பழங்குடி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் தங்கிப் படிப்பது போன்றும் அவர்கள் அனைவருமே எஸ்.சி. எஸ்.டி. இனத்தவர்கள் என்றும் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பல கோடி ரூபாய்கள் ஊழல்நடைபெற்றன.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரி (நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் முதுநிலை மண்டல மேலாளராகப் பதவியில் இருந்தவர்) 31.12.2015ல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், செஞ்சி, கோலியனூர் ஆகிய ஊர்களில் இல்லாத தொழிற்பயிற்சி நிலையங்கள் நடத்தியதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

திமுக - அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியிலுமே ஊழல், கமிஷன் என்று அரசு கல்வி நிறுவனங்களை சீரழித்துள்ளனர். இதன் காரணமாக கல்வித்தரம் பாதிக்கப்பட்டு, தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், கட்டணக்கொள்ளைக்கும் உதவியாக இருந்துள்ளனர். திமுக அதிமுக இரண்டு ஆட்சிகளில் பள்ளிக்கல்வி வேகமாக தனியார்மயமாகி வருகிறது.

தமிழகத்தில் 1978-ல் மெட்ரிக் பள்ளி தொடங்கிட மாநில அரசு அனுமதியளித்தது, 2001-ல் 2,983 மெட்ரிக் பள்ளிகளில் 11 லட்சத்து 68 ஆயிரத்து 431 மாணவர்கள் இருந்தனர், 2014-ல் மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கை 11,462 ஆக உயர்ந்து மாணவர் எண்ணிக்கை 36 லட்சத்து 17 ஆயிரத்து 473 ஆக அதிகரித்தது. 13 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இக் காலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. பல அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 2007-2008-ல் மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 864 ஆக இருந்தது, 2014-2015-ல் 1 லட்சத்து 54 ஆயிரத்து 80 ஆக குறைந்துவிட்டது. ஆறு ஆண்டுகளில் 90 ஆயிரத்து 744 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மாறிமாறி ஆட்சிக்குவந்த திமுகவும், அதிமுகவும் ஊழல் முறைகேடுகளால் கல்வித்துறையை சீரழித்துள்ளது இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in