Published : 15 May 2022 05:20 AM
Last Updated : 15 May 2022 05:20 AM

பெண்கள் பாதுகாப்பு வசதியுடன்500 அரசுப் பேருந்துகள் இயக்கம் - சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், துறை செயலாளர் கே.கோபால், காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

போக்குவரத்துத் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்துக்காக ‘நிர்பயா’ பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2,500 மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 500 பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 500 பேருந்துகளில் புதிய பாதுகாப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் 3 கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர், 4ஜி ஜிஎஸ்எம் சிம் வழியாக கிளவுட் அடிப்படையிலான கட்டளை மைய பயன்பாட்டுடன் இணைக்கப்படும். இம்முழு அமைப்பும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை வழியாக கண்காணிக்கப்படும்.

பேருந்து பயணத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையின்போது, அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம். அப்போது எழுப்பப்படும் ஒலியால், செயலியை இயக்குபவர் நிலைமையைக் கண்காணித்து, நிகழ்நேர அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஆவண செய்வார். இதற்காக கட்டளை மையம், காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் அவசரகால பதில் மையத்துடன் இணைக்கப்படும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் மற்றும் 35 பேருந்து முனையங்கள் முழுவதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியும்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை ஆகியவற்றில் பணியின்போது உயிரிழந்த 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், துறை செயலர் கே.கோபால், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x