வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு: தமிழக விவசாயிகளுக்கு பலனில்லை

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு: தமிழக விவசாயிகளுக்கு பலனில்லை
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், தக்காளி விலையும் உயா்ந்துள்ளது. விளைச்சல் அதிக அளவில் இருந்ததால், கடந்தமாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது. பின்னா் பரவலாக மழை பெய்ததால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வரத்து குறைவால், கடந்த மாதம் வரை 28 கிலோ கொண்ட ஒரு தக்காளி டிப்பர் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 மடங்கு உயர்ந்து, ரூ.1600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தை தக்காளி விவசாயிகள் கூறும்போது, "சந்தையில் நாள்தோறும் 25 டன் முதல் 30 டன் வரை தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்போது வரத்து குறைவால் கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது.

கடந்த மாதம் ரூ.300-க்கு விற்பனை செய்த 28 கிலோ எடைகொண்ட ஒரு டிப்பர், தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து ரூ.1600-க்கும், 15 கிலோ எடை கொண்ட டிப்பர் ரூ. 800 வரையும்விற்பனையாகிறது. விலை உயர்வால், சில்லரை வியாபாரிகள்கூட ஒரு டிப்பர் மட்டுமே வாங்கி செல்கின்றனர்" என்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில்தான் தக்காளி பயிரிடப்பட்டுள்ளதால், அடுத்த சில மாதங்களுக்கு வெளி மாநில தக்காளியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றும், விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் மட்டுமே இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, "கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், தாளவாடி, மாநில எல்லையான ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் தக்காளிதான் தற்போது சந்தைக்கு வருகின்றன. அவர்களிடம் உள்ளது கொடி தக்காளி என்பதால், சேதாரம் அதிகளவில் இருக்காது. தற்போது தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால், தமிழக விவசாயிகளுக்கு பலனில்லை.கர்நாடக மாநில விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். ஏற்கெனவே, போதிய விலை இல்லாததால், தமிழக விவசாயிகள் பலரும் தக்காளியை அழித்துவிட்டனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in