

நத்தம் பகுதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 1.5 டன் (1,500 கிலோ) மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
நத்தம் பகுதியில் தற்போது மாம்பழ சீசன் என்பதால், பல்வேறு இடங்களில் குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. நத்தம் பகுதியில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவராமபாண்டியன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், கண்ணன், ஜாபர்சாதிக் ஆகியோர் நத்தம் தார்பார், கொட்டாம்பட்டி சாலை, செந்துறை சாலை உள்ளிட்ட 16 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதில் ஆறு குடோன்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை யில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் மாம்பழங்களை பறி முதல் செய்து அழித்தனர். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.80 ஆயிரம் என மதிப்பிடப்பட்டது. ரசாயனக் கலவை மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வைக்கப்பட்டிருந்த ஆறு குடோன்களுக்கும் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.