

விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மடப்பட்டு வரை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில நாட்களுக்கு முன் உரிய அனுமதியின்றி சுமார் 18 கி.மீ. தூரத்திற்கு சிலர் ஆட்டோ பந்தயம் நடத்தியுள்ளனர். இந்த பந்தயத்தில் சென்னை வியாசர்பாடி சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 4 ஆட்டோக்களும், விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோவும் என மொத்தம் 5 ஆட்டோக்கள் கலந்து கொண்டன. இந்த ஆட்டோ பந்தயம், சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலானது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் எஸ்பி நாதா உத்தரவின் பேரில் ஆட்டோ பந்தயத்தில் கலந்து கொண்ட ஆட்டோக்களில் ஒரு ஆட்டோவை விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த் தலைமையிலான போலீ ஸார் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பசுபதி மீது தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பந்தயத்தில் ஈடுபட்ட மற்ற 4 ஆட்டோ ஓட்டுநர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இவர்கள் மீது ஐபிசி 279 பிரிவின் கீழ் பொது இடத்தில் அஜாக்கிரதையாகவும், அதிவேக மாகவும் வாகனம் ஓட்டிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இப்பிரிவு ஜாமினில் வரக்கூடிய பிரிவாகும்.
ஆறு மாத சிறை தண்டனை மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படலாம். இந்தப் சட்டப்பிரிவை திருத்தி தண்டனை கடுமையாக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.