

புதுச்சேரியில் ஸமார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒயிட் டவுன் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரி ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை நெடுகிலும் பெரிய வாய்க்கால் அருகே சாலை சந்திப்பு பகுதிகளில் இந்த வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில், அந்தந்த சாலையின் பெயர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் (பழைய பிரெஞ்சு பெயர்கள், புதிய தமிழ் பெயர்களும்) எழுதப்பட்டு திசை காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த சாலைகளில் உள்ள சுற்றுலாத் தலத்தின் இடங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பெயர் பலகைகள் காவி மற்றும் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பெயர் பலகைகளில் மர்ம நபர்கள் சிலர் கருப்புநிற வர்ணங்களை பூசி அழித்துள்ளனர்.
புதுச்சேரியில் சமீப காலமாக இந்தி திணிப்பு மற்றும் பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கருப்புநிற வர்ணத்தை பூசி அழிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப் பில் விசாரித்தபோது, ‘‘புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் இயல்பாக வைக்கப்பட்ட பெயர் பலகைகள் தான் அவை. அதில் அரசியல் சாயம் பூசுவது விஷமத்தனமானது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக் கப்படும்’’ என்று குறிப்பிட்டனர்.