

அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் பலியான கிருஷ்ண கிரியைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல், சொந்த கிராமமான கிருஷ்ணகிரி மாவட்டம் பாலகுறியில் 42 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறி கிராமத்தைச் சேர்ந்தவர் சி.ராமசாமி(43). ராணுவ வீரர். இவர் ஆர்மி 10 மெட்ராஸ் யூனிட்டில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அவர் அருணாச்சலப் பிரதேசம் தவாங் மாவட்டத்தில், இந்திய சீன எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட ராணுவ வீரர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றார். வளைவு ஒன்றில் அவர் திருப்ப முயற்சி செய்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் வாகன ஓட்டுநர் ராமசாமி உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் பெங்களூருவுக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. பின்னர், பெங்களூரு ராணுவ சேவை பிரிவைச் சேர்ந்த 30 ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் அங்கிருந்து வாகனம் மூலம் ராமசாமியின் உடலை அவரது சொந்த ஊரான பாலகுறிக்கு நேற்று கொண்டுவந்தனர். அங்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், ராணுவ வீரர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக ராணுவ வீரர் ராமசாமியின் மனைவி சுஜாதா, மகள் பூஜா, மகன்கள் ரோகித், தனீஷ் மற்றும் ராணுவ வீரரின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.
அதனை தொடர்ந்து எஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட காவல்துறையினர், ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் முகமது அஸ்லாம், தென் பிராந்திய தளபதியின் பிரதிநிதி கர்னல் ஏ.கே.பாண்டே, முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் மணிவண்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், வட்டாட்சியர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர். ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம், கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.