Published : 28 Apr 2014 01:35 PM
Last Updated : 28 Apr 2014 01:35 PM

சென்னையில் முழு ராணுவ மரியாதையுடன் மேஜர் முகுந்த் உடல் தகனம்

ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உடல் 42 துப்பாக்கி குண்டுகள் முழுங்க முழு ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதி களுடன் நடந்த மோதலில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் (31) உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தது. பின்னர் ராணுவ மரியாதையுடன் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

ராணுவ மருத்துவமனையிலிருந்து 25-வது பஞ்சா ரெஜிமென்ட் கமாண்டர் சர்மா சோப்ரா தலைமையில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திங்கள்கிழமை காலை கொண்டு வரப்பட்டது. முகுந்த் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.

முகுந்த் வரதராஜன் உடல் குடியிருப்பு வளாகத்தை அடைந்த போது அவரது மனைவி இந்து முகுந்த், குழந்தை அர்சியா, பெற்றோர் வரதராஜன், கீதா மற்றும் சகோதரிகள், நண்பர்கள் கதறி அழுதனர்.

பின்னர் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆளுநர் கே.ரோசய்யா சார்பில் அதிகாரிகள் மலர் வளையம் வைத்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், முகுந்த் படித்த எம்.சி.சி. கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாஸ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொது மக்கள் வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் வைக்கப்பட்டிருந்த முகுந்த் உடல் காலை10.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ராணுவ வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

காலை 11.45 மணிக்கு முகுந்த் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தை அடைந்தது. அங்கு முப்படைகளின் சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு முகுந்த் உடல் மின் தகன மேடையில் வைக்கப்பட்டது. அப்போது 14 ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி 3 முறை (மொத்தம் 42 குண்டுகள்) சுட்டு மேஜர் முகுந்த் வரதராஜன் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

உடைகள் ஒப்படைப்பு

பெசன்ட் நகர் மின்மயானத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் ராணுவ உடைகள், அவரது மனைவி இந்துவிடம் ஒப்படைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x