Published : 15 May 2022 04:20 AM
Last Updated : 15 May 2022 04:20 AM

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே சொத்து வரி உயர்வு: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி

அதிமுக ஆட்சியில் திட்டமிட்டதைவிட, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி குறைந்த அளவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே இந்த வரி உயர்வு என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த மத்திய பேருந்து நிலையம் முதல் மன்னார்புரம் வரையிலான பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: இந்த மேம்பாலத்தில் திண்டுக்கல் சாலை முதல் ஜங்ஷன் வரையிலான பாதை, மதுரை சாலை முதல் மத்திய பேருந்து நிலையம் வரையிலான பாதை பணிகள் முடிந்து, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. மன்னார்புரம் வழியாக சென்னை சாலைக்குச் செல்லும் பாதை மட்டும் ராணுவ இடத்தைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நிறைவடையவில்லை.

இந்தநிலையில், நிலத்தை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியதையடுத்து, அண்மையில் நெடுஞ்சாலைத் துறையிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது சென்னை சாலைக்குச் செல்லும் பாதையில் அணுகு சாலை, சேவை சாலை, மழைநீர் வடிகால் அமைப்பு, ராணுவ நிலத்துக்கான சுற்றுச்சுவர் ஆகியவை ரூ.3.53 கோடியில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவடையும்.

2018-ல் முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம், 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 200 சதவீதம், 1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 300 சதவீதம் என்ற விகிதத்தில் சொத்து வரியை உயர்த்தினர். ஆனால், தேர்தல் வரவிருந்ததால் அதை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்தனர். இதற்கிடையே, சொத்து வரியை சீராய்வு செய்யாவிட்டால் 2022- 2023-ம் நிதியாண்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை அளிக்க முடியாது என்று 15-வது நிதிக் குழு கூறிவிட்டது. எனவே, தற்போது திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் திட்டமிட்டதைவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி குறைந்த அளவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், ஆட்சியர் சு.சிவராசு, மேயர் மு.அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், செ‌.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், இரா.ராஜேந்திரன் (சேலம் வடக்கு), மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர்கள் வி.சீனிவாசராகவன், ஆர்.கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளர் எஸ்.முருகானந்தம், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x