Published : 06 May 2016 01:43 PM
Last Updated : 06 May 2016 01:43 PM

பல்லடம் தொகுதி நிலவரம்: சிதறும் வாக்குகள் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்துமா?

1957-ம் ஆண்டு உருவான தொகுதி பல்லடம்.

கறிக்கோழி பண்ணை, விசைத்தறிக் கூடங்கள், நூற்பாலைகள் மற்றும் விவசாயம் பிரதானத் தொழில்களாகும். பல்லடம் நகராட்சி 18 வார்டுகளையும், தொகுதியில் 28 ஊராட்சிகளும் உள்ளடங்கிய பகுதியாகும். தொகுதியில் கொங்கு வேளாளர், அருந்ததியர் மற்றும் நாயக்கர் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக 7 முறை, திமுக 2 முறை, பிரஜா சோசலிச கட்சி 3 முறை வென்ற தொகுதி. திருப்பூர் மாவட்டத்தில் அதிமுகவின், நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் இதுவும் ஒன்று. கடந்த 15 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவினேரே தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது, அக்கட்சிக்கான பலம் மற்றும் பலவீனம். நடப்பு சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம், கடந்த 5 ஆண்டுகளில் அரசின் நலத்திட்டங்களை தாண்டி, தொகுதிக்குள் வேறு எதுவும் செய்யவில்லை என்கிற குரல் வலுவாக ஒலிக்கிறது மக்களிடம்.

அதன் எதிரொலியோ என்னவோ அவருக்கு ‘சீட்’ கொடுக்காமல் கரைப்புதூர் ஏ.நடராஜனுக்கு கொடுத்துள்ளது அதிமுக மேலிடம். கட்சியிலும், தொகுதியிலும் நன்கு அறிமுகமானவர். கரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவராக 1996-ம் ஆண்டு முதல் தற்போது வரை என கடந்த 20 ஆண்டுகளாக இருந்தவர் என்பதால், தொகுதி பிரச்சினைகள் அத்துப்படி. கட்சியினரின் மத்தியில் அவருக்கு ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. இருந்தாலும் கடந்த காலங்களில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை மாற்றத்துக்கான குரல்களை அதிகமாக உலாவ விட்டுள்ளன. பல்லடம் நகரில் திமுகவும், மக்கள் நலக்கூட்டணியும் கிராமப்புற பகுதிகளில் அதிமுகவும், கணிசமாக வாக்குகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக, திமுக, மதிமுக, பாஜக என பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த 4 பேரும், கொங்கு வேளாளர் என்பதால் அச்சமூக வாக்குகள் பிரியும் சூழல் உள்ளது. அத்துடன் ஈஸ்வரனின் கொமதேகவும், கொங்கு வேளாளரை நிறுத்தியிருப்பதால், அச்சமூக வாக்குகள் மிகவும் பலஹீனப்படுகின்றன. பெருவாரி யாக உள்ள மற்றொரு சமூகமான அருந்ததியர் வாக்குகள் அதிமுகவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா சார்பாக போட்டியிடும் மதிமுக வேட்பாளர் க.முத்துரத்தினம் மாதப்பூர் ஊராட்சி மன்றத்தலைவராக 10 ஆண்டுகளாக இருந்ததால் மக்களிடம் நல்ல பரிச்சயம் உள்ளது.

மதிமுகவுக்கு சீட் கொடுக்கப்பட்டதால் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம் திமுகவில் இணைந்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். கட்சியில் சில நிர்வாகிகள், வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்கிற குரல்களும் திமுகவினரிடம் கேட்கின்றன. நாம்தமிழர் கட்சி, பாமகவும் களத்தில் நிற்பதால், வாக்குகள் நிச்சயம் சிதறும் நிலைக்கு பல்லடம் தொகுதி தள்ளப்பட்டுள்ளது.

அரசுக்கல்லூரி, விசைத்தறிக்கு மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுதல், குடிநீர் தட்டுப்பாடு, தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவ மனை, தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை ஏற்படுத்துதல், பல்லடம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மையத் தடுப்புகள் அமைத்தல், பல்லடம் - மங்கலம் சாலையை விரிவுப்படுத்தி புதிய சாலை அமைத்தல், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மின்மயான வசதி என எதிர்பார்ப்புகளும், அத்தியாவசியத் தேவைகளும் ஏராளம் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x