

தேர்தலில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர் களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசினார். முன்னதாக சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது பாமக. ஆனாலும், இந்த எண்ணிக்கை போதாதுதான். ஓரிரு பத்திரிகைகள், ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இவை மக்களிடையே கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துகளைத் திணிக்கின்றன. அறிவாலயத்தில் சொல்லப்படுவதை மக்களிடம் இவர்கள் திணிக்கிறார்கள். ஆனால், வாக்களிப்பது யாருக்கு எனத் தீர்மானிப்பது மக்கள்தான்.
மக்களின் பிரச்சினைகள், தேவைகளை தமிழகத்தின் அவலங்களை ஆராய்ந்து நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் 42 கருத்துகளை திமுக காப்பி அடித்து அவர்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2002 முதல் 2012 வரை கிரானைட், ஆற்று மணல், தாது மணல் போன்றவற்றில் சுமார் ரூ.70 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தமிழகத்தின் ரூ.4 லட்சம் கோடி கடனை அடைத்திருக்கலாம். மது விலக்கு குறித்து திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் கூறுகிறார்.
பாமக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டதும் சிவகாசி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சகத் தொழிலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படும். பட்டாசு தொழில் தயாரிப்புக்கான கல்வி பாடப் பிரிவு தொடங்கப்படும். வணிகர் களின் அனைத்து இடர்பாடு களும் நீக்கப்படும். இயற்கை சீற்றங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
தமிழகத்தில் 1.75 கோடி இளம் வாக்காளர்கள் உள்ள னர். இவர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் என்பதால் அவர்கள் பாமகவுக்கு வாக் களிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.