

விழுப்புரம் - காட்பாடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவையை துண்டித்துவிட்டு, வரும் 23-ம் தேதி முதல் விரைவு ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் - திருப்பதி இடையே 2 பயணிகள் ரயில்கள், விழுப்புரம் - காட்பாடி இடையே ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தன. 3 பயணிகள் ரயில் சேவை, கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தப்பப்பட்டன. பின்னர், இயக்கப்படவில்லை. கரோனா அலைகள் ஓய்ந்த பிறகும், 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பயணிகள் ரயிலுக்கு மாற்றாக விழுப்புரம் - காட்பாடி இடையே விரைவு ரயிலாக மாற்றி வரும் 23-ம் தேதி முதல் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் தி.மலை(காலை 7.15 மணிக்கு வந்தடைகிறது). பின்னர், விழுப்புரம் ரயில் நிலையத்தை காலை 9.10 மணிக்கு சென்றடைகிறது.
இதேபோல், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், திருவண்ணாமலை(இரவு 8.18 மணிக்கு வந்தடைகிறது). பின்னர், காட்பாடி ரயில் நிலையத்துக்கு இரவு 11.05 மணிக்கு சென்றடைகிறது. பயணிகள் ரயில், ஏற்கெனவே நிறுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் விரைவு ரயில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயிலில் 7 முன் பதிவு இல்லாத பெட்டி மற்றும் ஒரு கார்டு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில் சேவை, வழக்கம் போல் தொடர்கிறது.
இது குறித்து பயணிகள் கூறும் போது, “விழுப்புரத்தில் இருந்து காட்பாடி மற்றும் திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த 3 பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்க வேண்டும். பயணிகள் ரயில்களின் சேவையை துண்டித்துவிட்டு, விரைவு ரயிலாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப் படுவார்கள்.
மேலும், ஏற்கெனவே இயக் கப்பட்டு வந்த ரயில் கால அட்டவணைப்படி ரயிலை இயக்க வேண்டும். அப்போதுதான் ரயில் களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக இருக் கும். 3 பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க ரயில்வே அமைச் சகத்துக்கு தமிழக அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.