

ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்குமாறு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை நகராட்சி நவல்பூர் பகுதியில் எம்பிடி சாலையில் உள்ள ரயில்வே பாலம் மிகவும் குறுகலாக இருப்பதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக உள்ளது.
ஆங்கிலேயர்கள் காலத்து ரயில்வே மேம்பாலம் என்பதால் அதை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து, அங்கு ரூ.26.63 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில் சுமார் 25 சதவீதம் பணிகள் மட்டும் நடைபெற்றிருப்பது தெரியவந்துள் ளது. எனவே, உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு மேற் கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வில், உயர்மட்ட மேம்பாலப் பணியில் 26 தூண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதன் மீது சாலை கட்டமைக்கும் பணி நடைபெற்று வருவது தெரியவந்தது. இந்தப் பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேம்பாலத்தின் கீழே சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டியுள்ளது.இதற்காக, நவல்பூர் சிஎஸ்ஐ தேவாலயத்தின் சுற்றுச்சுவர் பகுதியில் 1,427 சதுரடி நிலம் தேவைப்படுகிறது. கையகப்படுத்தப்பட உள்ள அந்த இடத்தை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அந்த இடத்தை வழங்குமாறு தேவாலய நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், எஞ்சியுள்ள பணி களை விரைந்து முடிக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.