

சேத்துப்பட்டு அடுத்த நெடுங் குணம் கிராமத்தில் 1,330 திருக் குறளை 44 நிமிடங்களில் ஒப்புவித்த மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங் குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவி காவியா. இவர், 1,330 திருக்குறளை ஒப்புவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு, ஆசிரியை சரஸ்வதி ஊக்கமளித்து வழி நடத்தி வந்துள்ளார்.
இதையடுத்து, அப்துல்கலாம் உலக சாதனை ஆராய்ச்சி மையம் சார்பில் உலக சாதனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நெடுங்குணம் ராமச் சந்திர பெருமாள் கோயிலில் 44 நிமிடம் 10 விநாடியில் 1,330 திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து மாணவிக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், ஒன்றியக் குழு துணைத் தலைவர் லட்சுமி லலிதவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் காளிமுத்து வரவேற்றார்.
மாணவி காவியக்கு அப்துல் கலாம் உலக சாதனை ஆராய்ச்சி மையத்தின் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வேலாயுதம், உலக சாதனை மைய நிறுவனர் நந்தினி ஜெயபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.