Published : 14 May 2022 08:43 PM
Last Updated : 14 May 2022 08:43 PM

மதுரை மாநகராட்சியில் ‘பவர்’ இழக்கும் அதிமுக: திமுகவினருடன் நெருக்கம் காட்டும் கவுன்சிலர்களால் பின்னடைவு

மதுரை: மதுரையில் அதிமுக கவுன்சிலர்கள் திமுகவினருடன் அதிக நெருக்கம் காட்டுவதால், மாநகராட்சியில் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும், மாநகராட்சியில் தங்களின் உரிமையையே கேட்டுப்பெற முடியாதவர்கள் மக்கள் பிரச்சினையை எப்படி எதிரொலிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் அதிமுகவிற்கு 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில், மாநகராட்சியின் எதிர்கட்சித் தலைவராக 64-வது வார்டு கவுன்சிலரும், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான சோலை எம்.ராஜாவும், எதிர்கட்சி துணைத்தலைவராக 48-வது வார்டு ரூபிணி குமார், கொறடாவாக 45-வது கவுன்சிலர் கே.சண்முகவள்ளி உள்ளனர். கடந்த கால மதுரை மாநகராட்சி வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது திமுக, அதிமுக யார் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்றினாலும் மாநகராட்சி கூட்டங்களில் ஆளும்கட்சி, எதிர்கட்சியாக இரண்டு கட்சி கவுன்சிலர்களும் ஆக்ரோஷமாக மோதி கொள்வார்கள். மக்கள் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படும். அதற்கான தீர்வுகளும் ஒரளவு கிடைக்கும். மாநகராட்சி கூட்டங்களில் மோதிக்கொண்டாலும் திரைமறைவில் இருகட்சி கவுன்சிலர்களும் நட்பு வைத்திருப்பார்கள். ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை பொது வெளியில், மாநகராட்சி கூட்டங்களில் வெளிப்படையாக நட்பு பாராட்ட மாட்டார்கள். ஆனால், தற்போது திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் நேரடியாகவே நட்பு பாராட்டுகிறார்கள். அந்த நட்பு பாராட்டுதலே தற்போது மாநகராட்சியில் அதிமுகவின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அமைந்துவிட்டது.

கடந்த 2 கூட்டங்களாக மாமன்ற கூட்டரங்கில் முறையான‘சீட்’வரிசையை கூட பெற முடியாத நிலைக்கு மாநகராட்சியின் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுக தள்ளப்பட்டு விட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ், சிபிஎம் கட்சி கவுன்சிலர்களுக்கு கூட ஒரே பகுதியில் வரிசையாக‘சீட்’ஒதுக்கப்பட்டது. அதனாலே, கடந்த சில நாளுக்கு முன் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் தங்களுக்கு இருக்கைகள் சரியாக ஒதுக்கவில்லை என்று திமுக கவுன்சிலர்களின் இருக்கைகளை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், மாமன்ற கூட்டம் தொடங்குவது சிறிது நேரம் தடைபட்டது. அன்று நடந்த இந்த ‘இருக்கை’ப் போராட்டத்தில் கூட கவுன்சிலர் சண்முக வள்ளி, வேறு சில கவுன்சிலர்கள் மட்டுமே திமுக கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா பெரியளவிற்கும் எதிர்ப்பை காட்டவில்லை.

அவர் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் கடைசி வரை அதிமுக கவுன்சிலர்கள் அமர்ந்த இருக்கைகளை திமுகவினருக்கு விட்டுக்கொடுக்காமல் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு மாமன்ற கூட்டத்தை முடக்கி திமுக மேயருக்கும், அக்கட்சி கவுன்சிலர்களுக்கும் நெருக்கடியை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், சோலை ராஜா, சிறிது நேரத்தில் அதிமுக கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு சரியாக ‘சீட்’வழங்காத மேயரிடம் சென்று முறையிட செல்வதாக புறப்பட்டு சென்றுவிட்டார். மேயர் ஆலோசனை அடிப்படையிலே மாமன்ற கூட்டரங்கில் ‘சீட்’ ஒதுக்கப்படும். அப்படியிருக்கையில் ‘சீட்’ ஒதுக்கீடு செய்தவரிடமே முறையிட சென்றது அதிமுக கவுன்சிலர்களுக்கே பிடிக்கவில்லை. அதுவும் சோலைராஜா மேயரை நேரடியாக சந்திக்காமல் அவரது கணவர் பொன் வசந்த்தை சந்தித்து முறையிட்டார். அதன் பின் மேயர் இந்திராணி அடுத்த கூட்டத்தில் முறையாக ‘சீட்’ ஒதுக்குவதாக கூறியதால் அதற்கு ஒத்துக்கொண்டு திரும்பி அமைதியாக மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுடன் பின்வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார். எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, மேயரை சந்திக்காமல் அவரது கணவரை சந்தித்தது தான் தற்போது திமுகவிலும், அதிமுகவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் வெற்றி வாய்ப்புள்ள பல கவுன்சிலர்களுக்கு போட்டியிட ‘சீட்’வழங்காத நிலையிலே அதிமுக மாநகராட்சி தேர்தலில் இந்தளவுக்கு பெரிய தோல்வியை பெற்றது. தற்போது வெற்றிப் பெற்றவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் திமுகவினருடன் நெருக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு முன் எதிர் கட்சி கவுன்சிலர்கள், ஒன்று கூட அடுத்த நாள் கூட்டத்தில் நடத்த வேண்டிய விவாதங்களையும், அதற்கான வியூங்களை பற்றி பேசி முடிவெடுப்பார்கள். ஒவ்வொரு கூட்டத்தையும் நடத்தி முடிப்பதற்குள் ஆளும் கட்சியினர் பெரும் சிரமத்தை சந்திப்பார்கள். ஆனால், தற்போது போகிற போக்கில் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களை வழிநடத்தி ஆலோசனை கூறி வேண்டிய மதுரை மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ மாநகராட்சி கூட்டம் நடந்து ஒரு நாள் கழித்து அதிமுக கவுன்சிலர்களுக்கு ‘சீட்’ முறையாக ஒதுக்காதது குறித்து கண்டனம் தெரிவிக்கிறார்.

அதிமுக கவுன்சிலர்களை மாநகர செயலாளர் என்ற முறையில் செல்லூர் கே. ராஜூ கண்காணித்து திமுகவினருடன் நெருக்கமானவர்களை களையெடுத்து மாமன்றத்தில் பின்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு அதிமுக இழந்த பெருமையை மீட்க வேண்டும் என்றும், எதிர்வரும் மாமன்ற கூட்டங்களை எதிர்கொள்ள அதிமுக கவுன்சிலர்களுக்கு வியூகம் வகுத்து கொடுக்க வேண்டும் அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். அதை அவர் சரியாக செய்யாவிட்டால் அதிமுக கவுன்சிலர்கள், திமுகவினருடன் இன்னும் நெருக்கமாகி மாநகராட்சியில் இன்னும் ‘பவர்’இழக்க நேரிடும். உடனடியாக சரி செய்யவிடால் மக்களுக்காக அதிமுக மாமன்ற கூட்டங்களில் குரல் கொடுப்பதும் கேள்விகுறியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x